தொழிலதிபரின் உதவியால் நாடு திரும்பினார்!

ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரின் உயிரை ரூ.1 கோடி கொடுத்து தொழிலதிபர் காப்பாற்றியுள்ளார்.

கேரளாவின் திருச்சூர் அருகேயுள்ள இரிஞ்ஞாலக் குடாவை சேர்ந்தவர் பெக்ஸ் கிருஷ்ணன் (45). இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு பெக்ஸ் கிருஷ்ணன் ஓட்டிச் சென்ற கார் மோதி சூடானை சேர்ந்த சிறுவன் உயிரிழந்தான். இதுதொடர்பான வழக்கை அமீரகத்தின் உச்ச நீதிமன்றம் விசாரித்தது. சாட்சிகளின் அடிப்படையில் பெக்ஸ் கிருஷ்ணன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது.

இதன்பேரில் கடந்த 2013-ம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பெக்ஸ் கிருஷ்ணனின் உயிரை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற வில்லை. அவர்கள் கேரளாவை பூர்விகமாகக் கொண்ட ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர் யூசுப் அலியிடம் உதவி கோரினர்.

ஐக்கிய அரபு அமீரக சட்டத்தின்படி, உயிரிழந்த சூடான் சிறுவனின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால் பெக்ஸ் கிருஷ்ணனை விடுதலை செய்ய முடியும். இதன்படி பாதிக்கப்பட்ட சூடான் சிறுவனின் குடும்பத்தை தொழிலதிபர் யுசுப் அலி தேடி கண்டுபிடித்தார்.

அந்த குடும்பத்தினர், பெக்ஸ் கிருஷ்ணனுக்கு மன்னிப்பு வழங்க ஒப்புக் கொண்டனர். அதற்கு ஈடாக அந்த குடும்பத்துக்கு யூசுப் அலி
ரூ.1 கோடியை வழங்கினார். இதை சிறுவனின் குடும்பத்தினர் முறைப்படி தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் பெக்ஸ் கிருஷ்ணன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். விமானத்தில் நேற்றுமுன்தினம் வந்த கிருஷ்ணனை அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

பெக்ஸ் கிருஷ்ணன் கூறும் போது, “விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பால் கடந்த 9 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். லூலூ குழுமத் தலைவர் யூசுப் அலியின் பெரும் முயற்சியால் விடுதலையானேன். அவருக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை. இது எனக்கு கிடைத்த 2-வது பிறவி” என்று தெரிவித்தார்.

தொழிலதிபர் யூசுப் அலி கூறும்போது, “மரண தண்டனையில் இருந்து பெக்ஸ் கிருஷ்ணனின் உயிரை காப்பாற்ற கடவுள் எனக்கு வாய்ப்பளித்துள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித் துள்ளார்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.