மேதின உழைப்பாளர் கவிதை …!

உடல் வளைத்து…உளம் வெறுத்து….

உடல் வளைத்து உளம் வெறுத்து
தேயிலை மலை வலம் வந்து
கொழுந்து பறித்து
சிந்திய வியர்வைத்துளி காய்ந்து
ஈடான ஊதியம் கால் வயிற்றுக் கஞ்சிக்கில்லாது கலங்கிடும் உழைக்கும் வர்க்கம்…!
செங்குருதி கொதிக்க பணி செய்து
வெண்குருதி வியர்வையாய் சிந்த
காடு மேடு களம் கண்டு வெந்த
அங்கமதை தொழிற்சங்கம் எனும் அங்கம் கொண்டு ஆற்றிய பணிதான் என்ன…!
குளவியுடன் அட்டையும், சீறும் பாம்புடன் சிறுத்தையும் புரியும் அட்டகாசத்துடன்
கடும் பனியில் ரொட்டித்துண்டும் சர்க்கரையில்லா தேயிலைத் சாயத்துடன்
இரைப்பை நிரப்பியும் நிரப்பாமலும்….!
தேர்தல் காலங்களில் அரசியல் லாபம் கொண்ட ஓநாய்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாய் ஆன மலைத் தொழிலாளி
கூட்டம்,வாடுதையா நல்விடிவை நாடி,
உளம் ஏங்குதையா இவர்களின் நந்நிலையை தேடி…!
லங்கைத்தீவில் வாழ்வதன் வெளிச்சமின்றி வாழும் மலைத் தொழிலாளி  வர்க்கம் ,
ஆயிரம் கேட்டு புரியுதையா தர்க்கம்
கேலிக்கூத்தாய் ஆனதையா ஒரு பக்கம்
இதை வைத்துச் செய்யயதையா அரசியல்… வெட்கம்
விட்டு விட்டானே வெள்ளையன் அனனாதையாய்
உன் தேசமும் தேடும் ஓர் நாள் துக்கம்…!
இப்போது ஓடும் ரயில் வீதியும்,மலைத் தெருவும்
அப்போது எம் மக்கள் இட்ட எழுச்சி
இது மலையக புரட்சி,
இதையும் மாற்றியமைக்க
முயலும் இனவாத சூழ்ச்சி
ஆனாலும் மாறாது உழைப்போர் மாட்சி
இது மலையகம் தினமும் காணும் காட்சி…!
கடமையே கண்ணென விலா எழும்பு நோக
வெட்டிய கவ்வாத்து துண்டுகள்  தொழிலாளியின் முதுகுத் தண்டு வடங்கள்
கம்பனிக்காரனுக்கு செவ்வாழைத்தண்டுகள்
திரை மூடிய பனியாய் நம் தேசம்
காக்கும் உழைப்பின் சிகரம்,
நாட்டின் முதுகெழும்பாம்
மலைத் தொழிலாளி மறைமுக முதலாளி…!
வாய் கிழிய அரசியல் பேசும் வெட்டிப் பயல்களுக்கு புரியுமா உழைப்பின் அருமை,  உழைப்பாளி மகிமை..!
தேர்தல் வந்தால் போதும் கடவுளுக்கில்லாத
கருணை வந்து விடும் அரசியல் குள்ளநரிகளுக்கு…!
வாகை சூடி நாடாளுமன்றம் சென்றபின்
காடாளும் தொழிலாளர் என்போர் யாரென கேட்போர் பலருளர் இங்கே
கேட்ட ஊதியம் கிடைக்குமென கூறியோர் எங்கே…!
ஏமாறப் பிறந்தோர் இலங்கைத் தமிழர்களே
ஏமாற்றப் பிறந்தோரும் இலங்கைத் தலைமைகளே
என்று தணியும் இந்த அடிமை வாழ்வு ஆறடி லயந்தனில்
தொப்புள் கொடி உறவென கூறும் பாரதமும் இன்று வரை உன்னிப்பாய்தான் கவனிக்கின்றது ,
எனச்சொல்லியே பல யுகங்கள் கடந்து விட்டது
தமிழகம் தேர்தல் களம் காணின்,
இலங்கை தமிழர் நலம் ஞாபகம் வந்து விடும்
பின் அடுத்த தேர்தலில் நனைந்த ஆட்டுக்காக
அழும் ஓநாய் போல…!
வேல் கொண்ட வேலவா, சூரனிடம் மட்டுமா புரிவாய் உன் வேலையை, கொஞ்சம்
சூழ்ச்சிபுரிவோரிடமும் காட்டு உன் லீலையை…!

ஆக்கம்: சாஹித்ய ரத்னா
எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை ..

Leave a Reply

Your email address will not be published.