ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் தேர்வு, உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுகளின் போது, தாங்கள் சரியாக எழுதிய விடைகளை தவறு என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்ததாக, தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கௌதமன், லட்சுமிகாந்தன், அசோக்குமார், தாமோதரன் மற்றும் சிமியோன் ஆகிய 5 பேர் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து மாநில தகவல் ஆணையம், விரிவான விசாரணை நடத்தியது. இந்நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைவர் முத்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், அந்த வாரியத்தில் தலைவர் பதவிகளை வகித்தவர்கள் பொறுப்பின்றி செயல்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேலும் 2011-ஆம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பல தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல், பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக மாநில தகவல் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. அதன் அடிப்படையில் 2011 முதல் கடைசியாக பதவி வகித்த லதா வரை ஒன்பது அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
தேர்வர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அலைகழித்திருக்கிறது என்றும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதவிகளை வகித்த ஐஏஎஸ் அதிகாரிகள் சுர்ஜித் சவுத்ரி, விபு நாயர் , ஜெகன்நாதன், ஸ்ரீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் பணியில் இருந்து அனுப்ப வேண்டும் என்றும் தலைமைச் செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த ஒன்பது பேரில் சுர்ஜித் சவுத்ரி, விபு நாயர் தவிர்த்து மற்ற ஏழு அதிகாரிகளும் பணியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் ரஹ்மான்
தமிழ்மலர் மின்னிதழ்