இன்று எஸ்.பி.முத்துராமன் 86 வது பிறந்த தினம்.

இன்று (07.04.2021) வெற்றிப்பட இயக்குனரும்,தயாரிப்பாளருமான,
எஸ்.பி.முத்துராமன் அவர்களின் 86 வது பிறந்த தினமாகும்.

1935 .04.07 அன்று தமிழ்நாடு காரைக்குடியில் ராமசுப்பையா,விஷாலாட்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார் எஸ்பிஎம் .இவரின் தம்பி சுப.வீரபாண்டியன் திமுக வின் தீவிர விசுவாசி கலைஞர் கருணாநிதி மீது மிகவும் பேரபிமானம் கொண்டவர்.சிறந்த இலக்கிய பேச்சாளர். இவர் தந்தை ராமசுப்பையா தமிழக அரசின் சட்டமன்ற உறுப்பினராக (MLA) இருந்தவர். இவரின் மனைவி பெயர் கமலா.இவருக்கு இரண்டு பிள்ளைகள்.
திரு. எஸ்.பி.முத்துராமன் ஏவியெம் பட நிறுவனத்தின் செல்லப்பிள்ளை. 1960 இல் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான “களத்தூர் கண்ணம்மா”படத்தில் துணை இயக்குனராக அறிமுகமானார்.  ,1972 இல் “கனிமுத்து பாப்பா”என்ற படத்துடன் 1995
“தொட்டில் குழந்தை “படம் வரை 72 படங்களை இயக்கிய பெருமைக்குரியவர் எஸ்பிஎம்.சிவாஜி கணேசன், ரஜினி,கமல்,முத்துராமன்,ஜெய்சங்கர்,
சிவக்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை இயக்கியவர் இவர்.ரஜினியின் புவனா ஒரு கேள்விக்குறி,(இப்படத்தில் இவர் செய்த புதுமை,அது வரையில் கதாநாயகனாக நடித்த சிவகுமாரை வில்லனாகவும்,வில்லனாக நடித்த ரஜினியை கதாநாயகனாகவும் நடிக்க வைத்து   விஷப்பரீட்சை செய்து அமோக வெற்றி கண்டார்.ரஜினியின் குணச்சித்திர நடிப்பிற்கு  தீனி போட்டது “புவனா ஓரு கேள்விக்குறி “), ஆறிலிருந்து அறுபதுவரை….(இப்படம் ரஜினியின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய இமாலய வெற்றிப்படம்,)முரட்டுக்காளை,(நீண்ட காலமாக படங்கள் ஏதும் தயாரிக்காமல் தூங்கியிருந்த ஏவியெம்மை மீண்டும் தட்டியெழுப்பிய மாபெரும் வெற்றிப்படம்),
எங்கேயோ கேட்டக்குரல்,கழுகு,நெற்றிக்கண்,(கே.பாலச்சந்தரின் கவிதாலயாவிற்காக எஸ்பிஎம் இயக்கிய வெற்றிப்படம்,இரட்டை வேடங்களில் தகப்பனாகவும்,மகனாகவும் ரஜினி நடித்த படம்.தகப்பன் சக்ரவர்த்தி பாத்திரத்தில் ரஜினியின் ஸ்டைல் நிறைந்த நடிப்பு அபாரம்),
மிஸ்டர் பாரத்,நல்லவனுக்கு நல்லவன்,புதுக்கவிதை,பாயும் புலி,
அடுத்த வாரிசு,நான் மஹான் அல்ல,ப்ரியா,
ராணுவ வீரன்,போக்கிரி ராஜா,பாண்டியன்(எஸ்பிஎம்மின் 70 வது படம்),
ஸ்ரீராகவேந்திரா (ரஜினியின் 100 வது படம்,ரஜினியின் இஷ்ட தெய்வமாகிய ஸ்ரீ ராகவேந்தரின் ஆன்மீக வரலாறு கொண்ட மானசீக படம்.  ),மனிதன்,வேலைக்காரன்,
குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன் போன்ற படங்களையும்,கமலஹாசன் நடித்த
ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது,ஆடு புலி ஆட்டம்,சகலகலாவல்லவன்(அமோக வசூல் கண்ட படம்),
தூங்காதே தம்பிதூங்காதே,எனக்குள் ஒருவன்,உயர்ந்த உள்ளம் (எஸ்.பி.முத்துராமனின் 50 வது படம்),
ஜப்பானில் கல்யாணராமன்,பேர் சொல்லும் பிள்ளை போன்ற படங்களையும்,சிவாஜி கணேசன் நடித்த கவரிமான்,ரிஷிமூலம்,
வெற்றிக்கு ஒருவன் போன்ற படங்களையும்,மயங்குகிறாள் ஒரு மாது,
குடும்பம் ஒரு கதம்பம்,காசேதான் கடவுளடா,
துணிவே துணை(சிறந்த விறுவிறுப்பு கொண்ட பொழுது போக்கு படம்),காற்றினிலே வரும் கீதம் போன்ற படங்களையும் இயக்கியவர்.குறித்த காலத்திற்கு முன்னே படங்களை சிக்கனமாக இயக்கி,குறித்த தினத்தில் படத்தை வெளியிடுவதில் மகா  நேர்த்தியானவர். தயாரிப்பாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற பண்பான இயக்குநர் எஸ்.பி முத்துராமன் அவர்கள். பல விருதுகளையும் பெற்றவர் எஸ்பிஎம். 1977 இல் “ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது”,1978  ல் “புவனா ஓரு கேள்விக்குறி”.1979 இல் “ஆறிலிருந்து அறுபதுவரை” படங்களின் சிறந்த இயக்குனருக்கான பிஃலிம்பேஃர் விருதுகள்,தமிழ் மாநில அரசு விருதுகள்.மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது என பல விருதுகளை அடைந்தவர் எஸ்.பி.முத்துராமன். பல தெலுங்கு படங்களையும் இயக்கியுள்ளார்.மக்கள் திலகம் எம்ஜிஆர் ஏவியெம் நிறுவனத்திற்காக நடித்த ஒரே படமாகிய “அன்பே வா”வில் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் எஸ்பிஎம்,எல்லாக் கலை விழாக்களிலும் ஏற்ற தாழ்வு காணாது கலந்து கொண்டு கலைஞர்களை வாழ்த்தி மகிழ்வதில் இவருக்கு நிகர் இவரே. புது நடிகர்,பழம் பெரும் நடிகர் என பேதம் பாராது அனைவரிடமும் இன்முகத்துடன் சகஜமாக  பணியாற்றக்கூடியவர்.இப்பண்பட்ட மனிதருக்கான தனிச்சிறப்பு திரையுலகில் இன்றுவரை தக்க வைக்கப்பட்டுள்ளமை ஓர் உயரிய மதிப்பு கொண்ட கீர்த்தியே…!
2006 இல் கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த ஓர் அரசு விழாவில் எஸ்.பி.முத்துராமன் அவர்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியதை இப்பதிவில் நினைவு கூறுகின்றேன்.இதுவரை இவர் இயக்கிய படங்களில் இவருக்குப் பிடித்த படம் சிவாஜி கணேசன் நடித்த “கவரிமான்”படமே என்கிறார் எஸ்பிஎம். அன்று கலைவாணர் அரங்கில்  அன்னாருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இங்கு காணப்படுவது.
எஸ்.பி.முத்துராமன் அவர்களுக்கு இலங்கை ரசிகர்கள் சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்…!

ஆக்கம்:ஹாகித்ய ரத்னா
எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்
கம்பளை இலங்கை…
நன்றி.

Leave a Reply

Your email address will not be published.