சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு இந்திய உயர் “தாதா சாஹெப் பால்கே “விருது..!
இந்திய மத்திய அரசு அறிவிப்பு..!
சிவாஜி…! இந்தப் பெயர் தமிழத்தில் பல வருடங்களாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களோடு மட்டுமே பெருமை கொண்டிருந்தது. இன்று அந்தப் பெயருக்கு ஒரு புதுப்பரிணாமம் தோன்றியுள்ளது.அப்பரிமாணத்திற்கு உரிமையானவர் வேறு யாருமல்ல சிவாஜிராவ் என்ற “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்”அவர்களே.
மலையாள மாநிலத்திலிருந்து மக்கள் திலகம் எம்ஜியார் எவ்வாறு தமிழக மண்ணில் தடம் பதித்து உலகம் போற்றிய சிகரம் கண்டாரோ
அவ்வழியில் கர்நாடக மாநிலத்திலிருந்து ஓர் கறுப்பு வைரம் தமிழகம் நோக்கி முட்கள் நிறைந்த பாதையில் நீண்ட பயணமாக வந்தடைந்து தமிழ்த்திரையின் கதவுகளை பல தடவை தட்டிக்கொண்டேயிருந்தது.ஓர் நாள் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் எனும் திரைச்சிற்பியின் வீட்டுக் கதவைத் தட்டிய போது இக்கறுப்பு வைரத்தின் ஓளி அந்தச்சிற்பியின் விழித்திரையில் பிரகாசமாக ஒளிர்ந்தது.சிவாஜிராவ் என்ற அக்கறுப்பு வைரம் நன்கு பட்டைத் தீட்டப்பட்டு “ரஜினிகாந்த் “ஆக வடிவம் பெற்றது.
1975 இல் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் உருவான “அபூர்வராகங்கள்”படம் மூலம் “பாண்டியன்”என்ற பாத்திரத்தில் அறிமுகமானார் ரஜினிகாந்த். ஒரு வீட்டின் நுழைவாயிலைத் திறந்தவாறு “பைரவி வீடு இதானா”என்ற வசனமே ரஜினிகாந்த் பேசிய முதல் வசனம். இக்காட்சி அறிமுகத்துடன் இந்த ஸ்டைல் மன்னனை தமிழகம் வரவேற்றது.யுகபுருஷர்கள் ஒரு சிலரே அகிலத்தில் தோன்றி மக்கள் மனதில் நிரந்தரமாக தடம் பதிப்பர்.அவ்வண்ணமே யுகக்கலைஞர்களும் இப்புவிதனில்
ஜனனம் கொள்வர். அந்த ரீதியில் உலக வாழ் அனைத்து தமிழர்களுக்கும், தமிழை அறிந்தோர்களுக்கும் கலை ரீதியான பிறப்பிடமும்,இருப்பிடமும் தமிழகம்தான்.
குறிப்பாக கோடம்பாக்கம் என்றாலே சினிமாவின் அடைக்கலம் எனலாம்.தமிழ் சினிமாவின் “பிதாமகன்”என்ற சொல்லுக்கு உரித்தானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனே.இதில் மாற்றுக்கருத்தில்லை.அது போல் மக்கள் திலகத்தின் வரவு பாரதமே போற்றும் வணக்கத்துக்குரியது.இன்றுவரையும் அந்த மாமனிதன் மக்கள் மத்தியில் ,அவர்களது நெஞ்சக் கோயில்களில் இதயதெய்வமாக சிம்மாசனமிட்டு வீற்றிருப்பவர் பொன்மனச்செம்மலே. தமிழக சினிமா,அரசியல் சாம்ராஜ்யத்தின் ஓர் சகாப்தம் மக்கள் திலகம் எம்ஜியார்.
இரு திலகங்களின் மறைவுக்குப் பின் அவ்விடம் இன்னும் பூர்த்தி காணாத இடமாகவே உள்ளது.தமிழக சினிமா கலையுலகில் இவ்விடங்களை நிரப்பக்கூடியவர்களாக உலகநாயகன் கமலஹாசன்,சுப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோருக்கு ஆற்றல் உள்ளதா என்பதை இனி வரும் காலங்களில் அவர்களின் “மக்கள் பணியாற்றல்” மூலமாகவே கணிக்க முடியும்.அந்த அடிப்படையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய தேசத்தின் தவிர்க்க முடியாத ஒரு ஆதர்ஷ சக்தியாக உள்ளார் என்ற விடயமும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. 1950.12.12.அன்று கர்நாடக மாநிலத்தில் ஓர் நடுத்தர குடும்பத்தில் ரானோஜிராவ்,ராம்பாய் இணையருக்கு நான்காவது மகனாப் பிறந்தார். இவரின் இயற்பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்.பெங்களூருவில் கல்வி கற்றபின் பெங்களூரு மாநகராட்சி பேரூந்தில் நடத்துநனராக சிறிது காலம் பணியாற்றினார். நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் சிவாஜிராவிற்கு அதிகம்.பல மேடை நாடகங்களில் நடித்து பலரின் பாராட்டும் பெற்றவர் சிவாஜிராவ்.மேடையில் இவர் இட்ட துரியோதனன் வேடம் பிரபலமானது.
1973 சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மெட்ராஸ் பிஃலிம் இன்டர்ஸ்றியில் சேர்ந்து நடிப்புப்பயிற்சியில் தேர்ச்சி பெறுகின்ற தருணத்தில் இயக்குனர் கே.பாலச்சந்தரின் அறிமுகம் இவருக்கு கிடைக்கவே “அபூர்வ ராகங்கள் ” படத்தில் “பாண்டியன்”என்ற கதாபாத்திரத்தில் ஒரு பெரிய பங்களாவின் வாயிற்கதவை திறந்த வண்ணம்”இதானே பைரவி வீடு”என்ற வசனத்துடன் தழிழ் நாட்டின் இமாலய கலைவாசல் எனும் நுழைவாயிலில் நுழைந்தார் இக்கலைஞன். சிவாஜிராவ் என்றவரை “ரஜினிகாந்த்”என சினிமாவுக்காக மாற்றியவர் கே.பி. இவரது காட்சி வரும் போது “சுருதி பேதம்”என அபூர்வ ராகங்களில்
டைட்டில் இடப்பட்டிருக்கும். துரோணரிடம் வித்தை கற்ற அர்ஜுனன் போல் கே .பி.என்ற திரைச்சிற்பியின் உளியினால் செதுக்கப்பட்டவர் ரஜினி. மீண்டும் கே.பியின் இயக்கத்தில் “மூன்று முடிச்சு””அவர்கள்”படங்களில் வில்லனாக
வித்தியாசமான பாணியில் நடித்து அப்பாத்திரங்களுக்கு உயிர் ஊட்டியிருந்தார் ரஜினி. “மூன்று முடிச்சு”படத்தில்
சிகரட்டை மேலே தூக்கிப் போட்டு வாயில் கவ்வும் காட்சியில் ரசிகர்களை ஈர்த்தெடுத்து அசத்தியிருப்பார்.தொடர்ந்து ரஜினி வாழ்வில் ஏறுமுகந்தான்.1977 இல் மட்டும் 15 படங்கள், 1978 இல் 20 படங்கள்,1979 இல் 13,என ரஜினியின் உழைப்பு ஓய்வின்றி தொடர்ந்தது .நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன்1978 இல் இணைந்த முதல் படம் “ஜஸ்டிஸ் கோபிநாத் “.1977 இல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “16 வயதிலே”ரஜினியின் “பரட்டை”பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கண்டது.ரஜினியின் படங்கள் நல்ல ஏற்றம் கண்ட சூழலில் தமிழகத்தின் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அதிகமாகவே கிடைத்தது. இவரின் கால்ஷீட்டுக்காக பல கம்பெனிகள் கால் கடுக்க நின்ற வரலாறும் நிறைய உண்டு. கே.பிக்குப் பின் ரஜினியின் ஆற்றலுக்கு அதிகம் தீனியிட்டவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். “புவனா ஒரு கேள்விக்குறி “படத்தில் அதுவரை கதாநாயகனாக நடித்த சிவகுமாரை இப்படத்தில் வில்லனாகவும்,வில்லனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினியை கதாநாயகனாகவும் கொண்டு விஷப்பரீட்சையில் தைரியமாக இறங்கி அமோக வெற்றி கண்டவர் எஸ்.பி.முத்துராமன். கே.பியைப்போல ரஜினிக்கு நிறைய வெற்றிப்படங்களைக்
கொடுத்தவர் எஸ்.பி.எம்.. ரஜினி நடித்த முக்கிய சில படங்களைக் காணலாம். பைரவி,இளமை ஊஞ்சலாடுகிறது,முள்ளும் மலரும்,தப்புத்தாளங்கள்,ப்ரியா,
நினைத்தாலே இனிக்கும்,தர்மயுத்தம்,
ஆறிலிருந்து அறுபதுவரை,பில்லா,
காளி,ஜானி,முரட்டுக்காளை,தில்லு முல்லு,நெற்றிக்கண்,எங்கேயோ கேட்ட குரல்,மூன்று முகம்,தங்கமகன்,நல்லவனுக்கு நல்லவன்,நான் சிகப்பு மனிதன்,ஸ்ரீராகவேந்திரா 100வது படம்,
படிக்காதவன்,மிஸ்டர் பாரத்,வேலைக்காரன்,பிளட் ஸ்ட்டோன்(ஆங்கிலம்),மாப்பிள்ளை,பணக்காரன்,மன்னன் அண்ணாமலை,எஜமான்,உழைப்பாளி,
பாட்ஷா,பெத்தராயுடு (தெலுங்கு),முத்து,
அருணாச்சலம் (இப்படத்தின் லாபத்தை வி.கே.ராமசாமி,கலைஞானம் போன்ற சினிமாத் தொழிலால் நலிவுற்றவர்களுக்குப் பிரித்து வழங்கினார் ரஜினி),படையப்பா,சந்திரமுகி (துவண்டு போன சிவாஜி புரொடக்ஸனுக்கு உயிர் கொடுத்த படம்)பல நாட்கள் ஒரே அரங்கில் ஓடி வெற்றி கண்ட சாதனைப்படம், பாபா,குசேலன் தோல்விக்குப்பின் ரஜினியை இறங்கு முகத்தில் கண்டவர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்த படங்கள், சிவாஜி,எந்திரன் ஷங்கர் இயக்கத்தில் நல்ல வசூல் கண்ட படங்கள்.ஷங்கரின் இயக்கத்தில் 2.0 ,ஒரளவுக்கு வசூல் பார்த்தது.லிங்கா,கபாலி,பேட்ட,தர்பார் சுமாராக ஓடிய படங்கள்….
ரஜினிப்பெற்ற விருதுகள்…
தமிழக அரசின் கலைமாமணி விருது 1982.
நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருது 1995.
தமிழக அரசின் சிறந்த படங்களாக…
1977_16 வயதினிலே
1978_முற்றும் மலரும்
1978_அவள் அப்படித்தான்
1978_இளமை ஊஞ்சலாடுகிறது
1982_எங்கேயோ கேட்ட குரல்
சிறந்த நடிகர்…
1978_முள்ளும் மலரும்
1982_மூன்று முகம்
1995_முத்து…
தமிழக அரசின் எம்ஜிஆர் விருது1989. பிஃலிம்பேர் விருது.. 1975அபூர்வராகங்கள்
1977_புவனா ஒரு கேள்விக்குறி
1978_முள்ளும் மலரும்
1982_எங்கேயோ கேட்ட குரல்
1984_நல்லவனுக்கு நல்லவன்(சிறந்த நடிகர்)
சினிமா எக்ஸ்பிரஸ் விருது..
சிறந்த நடிகர்.
1984_நல்லவனுக்கு நல்லவன்
விஷேச பரிசு:1985
ஸ்ரீராகவேந்திரா
சிறந்த நடிகர் 1987:முத்து
சன் ப்ளாஷ் விருது
1987:வேலைக்காரன்
என பல விருதுகளை பெற்றவர்.
இந்தியாவின் மிக உயர்ந்த “பத்மபூஷண்”(2000)
பத்மவிபூஷண் “(2016)போன்ற உயர் விருதுகளையும்,2014 இல் கோவாவில் நடைபெற்ற சர்வதேச பிஃலிம் பெஃஸ்டிவல் விழாவில் சிறப்பு விருதையும் அடைந்துள்ளார்.
இதுவரை 183 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்..
இதில் தமிழ்:106
தெலுங்கு:16
கன்னடம்:11
மலையாளம்:02
ஹிந்தி:24
வங்காளம்:01
ஆங்கிலம்:01
கௌரவம் வேடம்:18..
பி.எஸ்.வீரப்பாவிற்கு(அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி,சபாஷ் சரியான போட்டி) பின் பஞ்ச் வசனங்கள் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் ரஜினியே..
16 வயதினிலே:இது எப்படியிருக்கு
முத்து:வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.
பாட்ஷா:நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி
சிவாஜி:பன்னிங்கதான் கூட்டமா வரும்
சிங்கம் சிங்கிலாத்தான் வரும்
என திரையில் விசிலும்,கைதட்ட
லுமாக ரசிகர்களை ஈர்த்ததில் வல்லவர் ரஜினிக்கு நிகர் ரஜினியே..
நீண்ட காலமாக அரசியலில் ஈடுபடப்போவதாக பிடி கொடுக்காமலும்,பிடி கொடுத்தும் பேசி வந்த ரஜினியை தமிழக அரசியல் களத்தில்
வரேவற்பதில்,அவரது ரசிகர்கள் தீவிரமாக இருந்த நேரத்தில் “நான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை “என்ற அதிர்ச்சியான அறிவிப்பை தன் உடல் நிலையைக் காரணம் காட்டி தெள்ளத் தெளிவாக கூறி நீண்ட வருட சந்தேகத்திற்கு முற்றுபுள்ளி வைத்தார் ரஜினி. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசியலில் ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சப்பாடும் இவருக்கு இல்லாமல் இல்லை. இது நாள் வரையில் சினிமா களத்தில் கொண்ட கௌரவமும்,புகழும் அரசியல் களத்தில் இழக்க நேரிடுமோ என்ற நிலையும் ரஜினியை ஆட்கொள்ளாமல் இல்லை.
ரஜினி அரசியலில் இணைந்து முதல்வர் நாட்காலியை அலங்கரிப்பது என்பது வெகு சுலபமான விடயமல்ல,தமிழகத்தின் ஆட்சியை காங்கிரஸிற்கு பின் அதிமுக,திமுக,என்ற பாரம்பரிய பெரிய கட்சிகள் மாறி மாறி ஆக்ரமிப்பு கொள்ளும் சக்திமிக்க கழகங்களுக்கு மத்தியில் ரஜினியின்
புதிய ஆன்மீக கொள்கை கொண்ட கட்சி தாக்குப் பிடிக்குமா என்பது தமிழக மக்களின் எண்ணங்களின் அடிப்படையில்தான் தங்கியுள்ளது.எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் இதுவரை தமிழகம் கண்டிராத
ஊடகங்களுக்கு பலமான தீனியிடும்
வகையில் ஓர் சவால் நிறைந்த களமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அத்தனை சவால்களையும் தாண்டி, ரஜினி அரசியல் களத்தில் சினிமாவில் கண்ட சாதனைகளைப்போல் சாதிப்பாராகில் சுப்பர் ஸ்டார் என்ற சக்தி வெறும் கலை என்ற வட்டத்துக்குள் அடங்காமல் அரசியல் களத்திலும் அவரின் கீர்த்தியை அகிலம் போற்றச்செய்யும்….
மக்கள் திலகம் இருந்த சூழலும், தற்போது தமிழகம் இருக்கும் நிலைக்கும்
நிறைய வேறுபாடுகள் உண்டு என்பதும்
ரஜினிக்கு தெரியாததல்ல. அத்துடன்
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்ற கொள்கையும் தமிழகத்தில் கற்றோர்கள் மட்டத்திலும்,தமிழ்க்கொள்கைகளில் ஊறித்தளைத்தவர்களிடம் காணப்படுவதும் கவனத்திற்குரியது .பிறப்பால் ரஜினி ஓர் வேற்று மாநிலத்தவர்.ஆயினும் எம்ஜியாரும்,ஜெயலலிதாவும் வேறுமாநிலத்தவர்,அப்படியிருக்க ரஜினி விடயத்தில் மட்டும் ஏன் இந்த மாநில வேறுபாடு என நியாயமான கேள்வி எழுவதும் அடிக்கடி நடப்பதுண்டு.எம்ஜியாரும் ஜெயலலிதாவும் கடந்து வந்த பாதைக்கும்
ரஜினி நடந்த பாதைக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. திரையிலே தனது தலைவனை உச்சநட்சத்திரமாக கண்ட ரஜினியின் ரசிகர்களின் எண்ணம் எதிர்காலத்தில் ஈடேறுமா எனக்காத்திருந்த ரசிகர்களுக்கு இவ்வறிவிப்பு தாங்க முடியாத வேதனையே.
இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பில்
முற்றிலும் இலங்கையில் படமாக்கப்பட்ட
“தீ”படப்பிடிப்பின் போது ரஜினி அவர்களை கொழும்பு பொன்னம்பலவாணேஷ்வரர் ஆலயத்தில் முதன்முதலாக நேரில் சந்தித்ததையும்,கடந்த ஆண்டு சினிமா தயாரிப்பாளரும்,கதாசிரியருமான
திரு.கலைஞானம் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற போது,அவ்விழாவிற்கு ரஜினிகாந்த் தலைமையேற்றபோது நேரில் அவருடன்
பழகியதையும் இப்பதிவில் மனநிறைவுடன் பகிர்கின்றேன்.
இலங்கை ரசிகர்கள் சார்பாக தமிழகத்தின் ஓர் மாபெரும் ஆதர்ஷ சக்தியாக விளங்கும்
“சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “என்ற கலைஞனுக்கு இந்திய உயர் விருதான “தாதா சாஹெப் பால்கே “வழங்கப்படதையிட்டு எமது உளமார்ந்த நல்வாழ்த்துகளை இனிதே தெரிவித்துக் கொள்வதில் அகமகிழ்கின்றோம்…
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி
சதீஷ் கம்பளை)