ஞானத்தை யாரிடம் கற்பது..!

”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.

அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.

இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.

ஆனால்,

மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?

மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?

மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல…என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.

இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.

வே. இராஜவர்மன் டில்லி தலைமை செய்தி ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.