சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே இருக்கும் சிவன் மலை மீது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மிக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலின் சிறப்பே இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி தான். முன் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த பெட்டியில் அடிக்கடி ஒரு சில குறிப்பிட்ட பொருட்கள் மாற்றி மாற்றி வைக்கப்படுகின்றன.

வேறு எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு விசேஷமாக இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது.

சுப்பிரமணிய சாமியே பக்தர்களின் கனவில் தோன்றி ஒரு குறிப்பிட்ட பொருளை முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

இப்படி உத்தரவு பெற்ற நபர், கோயில் நிர்வாகத்தை அணுகி, விவரத்தைக் கூறினால், அவர் சொன்னது உண்மையா இல்லையா என்பதை சுவாமி முன் பூ போட்டு பார்ப்பார்கள். வெள்ளப்பூ வந்தால் கனவில் வந்த பொருளை, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.

இப்படி உத்தரவு பெட்டியில் வைக்கும் பொருளுக்கு எந்த கால நிர்ணயமும் கிடையாது.

அடுத்த பொருள் குறித்து வேறு பக்தர்கள் யாருக்கேனும் கனவில் உத்தரவிடும் வரை, அதற்கு முந்தைய பொருள் அந்த பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

இப்படி இந்த பெட்டியில் வைக்க உத்தரவாகும் பொருளுக்கும், சமூகத்தில் அந்த சூழலுக்கும் ஏதேனும் தாக்கம் இருக்கும் வகையில் இருப்பது வியப்பானது.

ஆண்டவன் உத்தரவு

திருப்பூரை சேர்ந்த வேலாயுதம் யாதவ் (32) என்ற பக்தரின் கனவில் மார்ச் 19 2021 அன்று சாமி தோன்றி வெள்ளிவேலின் முன்பகுதியில் ஓம் என்றும் பின்பகுதியில் தாமரைப்பூவையும் வரைந்து பெட்டியில் வைக்கச்சொன்னதாக கூறியிருக்கிறார்.

சுவாமியிடம் உத்தரவு கேட்டு தற்பொழுது அந்த பெட்டியில் அதே போன்றதொரு புது வெள்ளிவேல் செய்து வைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர் கூறுகையில், “சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டிக்கும், சமூக நிகழ்வுக்கும் எப்போதும் அதிக தொடர்பு இருந்திருக்கின்றது.

தற்போதைய நிகழ்விற்கும் வரும் தேர்தலுக்கும் சம்பந்தம் இருக்கும் என்றே எண்ணத்தோணுகிறது என்று கூறினார்.

செய்தியாளர் வீரராஜ்

தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.