கே.எஸ்.அழகிரி பெட்ரோல், டீசல் விலை குறித்து அறிக்கை

பெட்ரோலை லிட்டருக்கு ரூ.44 ஆகவும், டீசலை லிட்டருக்கு ரூ.38 ரூபாயாக நிர்ணயித்தால் மட்டுமே உண்மையான விலைக்குறைப்பு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“ஏழைகள் என்ற சொல்லை இல்லாமல் செய்வதே எங்கள் லட்சியம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். பாஜகவுடன் சேர்ந்து ஏழைகளே இல்லாமல் செய்து கொண்டிருக்கிறீர்கள். பொது முடக்கத்துக்குப் பிறகு வாழ்வாதாரத்துக்கே வழியின்றி ஏழைகள் இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு என கடும் சுமையை ஏற்றி மக்களைச் சித்ரவதை செய்து கொண்டிருக்கிறீர்கள். நடுத்தர வர்க்கம் நடுத்தெருவுக்கு வந்துவிட்டது. ஏழைகள் பசியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் லட்சியம் என்றோ நிறைவேறிவிட்டது.

கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாயாகவும் இருந்து வந்தது. இதன் காரணமாக, விலைவாசியும் உயர்ந்ததோடு, நடுத்தர மற்றும் ஏழை மக்கள் சொல்லொணாத் துயரம் அடைந்தனர். தேர்தல் முடிவு கணிப்புகள் திமுகவுக்குச் சாதகமாக இருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 16 காசுகள் குறைத்து 93 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைத்து லிட்டருக்கு 86.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு மக்களின் துயரத்தைத் துடைக்கக் கூடியதல்ல. பெட்ரோலை லிட்டருக்கு ரூ.44 ஆகவும், டீசலை லிட்டருக்கு ரூ.38 ரூபாயாக நிர்ணயித்தால் மட்டுமே உண்மையான விலைக்குறைப்பு. இதை எல்லாம் நம்பி தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.

செய்தியாளர் தமீம் அன்சாரி.

தமிழ் மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.