நீரிழிவுக்காரர்கள் பழங்கள் சாப்பிடலாமா? சந்தேகங்கள், விளக்கங்கள்!

நீரிழிவு இருந்தால் பழங்கள் சாப்பிடலாமா, சாப்பிடலாம் என்றால் என்னென்ன பழங்களை, எவ்வளவு சாப்பிடலாம், சாப்பிடக் கூடாத பழங்கள்… இப்படி ஏராளமான சந்தேகங்கள் உண்டு பலருக்கும். அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் சொல்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்

நாட்டுப் பப்பாளி, நாட்டுக் கொய்யா, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, தர்பூசணி, கொடைக்கானல் மற்றும் இமயமலைப் பகுதியில் விளைவிக்கப்படுகிற பேரிக்காய், நாட்டு மாதுளம்பழம், நாட்டு நாவல்பழம் ஆகியவற்றை நீரிழிவு இருப்பவர்களும் சாப்பிடலாம்.

டென்னிஸ் பந்து அளவுக்கு இருக்கும் வெளிநாட்டு கொய்யாவைச் சாப்பிடாதீர்கள். அதில் நார்ச்சத்து குறைவாக இருக்கும். அதனால், பழத்தில் இருக்கிற சர்க்கரைச்சத்து வெகு சீக்கிரம் ரத்தத்துடன் கலந்துவிடும்.

நீரிழிவு இருப்பவர்கள் பழச்சாறு அருந்தவே கூடாது. சாத்துக்குடியின் மேல் தோல், நடுத்தோல் இரண்டையும் உரித்துவிட்டு, விதையை மட்டும் நீக்கி, சுளைகளின்மீது இருக்கும் மெல்லியத்தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டும். ஜூஸ் போடுவதற்காகவே மார்க்கெட்டுக்கு வருகிற ஆரஞ்சுப்பழங்களையும் கொழ கொழப்பாக இருக்கிற வெளிநாட்டு பேரிக்காய்களையும் நீரிழிவு இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது. பிங்க் நிற முத்துகள் கொண்ட மாதுளையை, சாறாக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும்.

விரல் நீளத்துக்கு இருக்கிற நாவல் பழங்கள் வேண்டாம்.

குட்டிக்குட்டியாக வட்டமாக இருக்கிற நம்மூர் நாவல் பழம்தான் பெஸ்ட்.

எவ்வளவு சாப்பிடலாம்?

நாளொன்றுக்கு ஒரு கப் நிறைய மேலே சொன்ன பழங்களில் ஒன்றையோ அல்லது மேலே சொன்ன பழங்களையும் சேர்த்தோ சாப்பிடலாம். அதாவது,
ஒரு கப்பில் 200 மில்லி நீர் ஊற்றினால் வரும் அளவுக்கு பழத்துண்டுகளைச் சாப்பிடலாம். இதற்குமேல் வேண்டாம்.

சாப்பிடக் கூடாத இரண்டு பழங்கள்!

அதிக கலோரிகள் கொண்ட மாம்பழத்தையும் பலாப்பழத்தையும் நீரிழிவு இருப்பவர்கள் சாப்பிடவே கூடாது. ஆசைக்கு ஒரு துண்டு சாப்பிடலாம் என்று வாயில் போட்டால், சாப்பிடத் தூண்டிக்கொண்டே இருக்கும் பழங்கள் இவை. அதனால், நீரிழிவு இருப்பவர்கள் இந்தப் பழங்களின் மீது. ஆசைப்படாமல் இருப்பதே நல்லது.

மாங்காய் சாப்பிடலாம்!

மாம்பழத்தின் மீது தீரா விருப்பம் கொண்டவர்கள், மாங்காய் சாப்பிட்டு ஆசையைத் தீர்த்துக்கொள்ளலாம். அதுவும் தோலுடன் சேர்த்துதான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் ‘மா’வில் செங்காய்கூட சாப்பிடக் கூடாது.

டாக்டரை தள்ளிவைக்கும் ஆப்பிள் சாப்பிடலாமா?

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டி வராது என்பது வெளிநாட்டுப் பழமொழி. ஆனால், நம் ஊருக்கு நெல்லிக்காயே போதும். ஒரு பெரிய நெல்லியில் வெறும் இரண்டு துண்டுகளைச் சாப்பிட்டாலே நல்ல நோயெதிர்ப்பு சக்தியுடன் இருக்கலாம். நெல்லிக்காயைப் பச்சையாகவோ சாறெடுத்தோ குடிக்க வேண்டிய அவசிய மில்லை. கல் உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டு இரண்டு மாதங்கள் வரை சாப்பிடலாம். நீரிழிவு இருப்பவர்கள் ஆப்பிளுக்குப் பதில் பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாம்.

ஹை சுகர் இருப்பவர்களும் பழங்கள் சாப்பிடலாமா?

உங்கள் சுகர் அளவுக்கு ஏற்றபடி என்ன பழம் சாப்பிடலாம் என்பதை டயட்டீஷியன் ஆலோசனை யோடு சாப்பிடுங்கள்.

செங்காயாகச் சாப்பிட்டால் சுகர் அதிகமாகாதா?

பழங்களைச் செங்காயாகச் சாப்பிட்டால் சுகர் அதிக மாகாது என்று சிலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது இன்னமும் நிரூபிக்கப் படவில்லை. அதே நேரம், நீங்கள் சாப்பிடுகிற பழத்தின் கலோரி, நீங்கள் சாப்பிடுகிற அளவு போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.