நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 50

அறுசுவைகளில் ஒன்றான துவர்ப்பு சுவை கொண்ட விளாங்காய் , விளாம்பழம்… புளிப்பு இனிப்பு சுவைகளுடன் அருமருந்தாக போற்றப்படுகிறது.

பலமான ஓட்டுடன் பார்ப்பதற்கு மிக சாதாரணமாகத் தெரியும் விளாம்பழம் பல்வேறு மருத்துவ குணங்களைக்கொண்டது.

விளாம்பழத்தில் புரதம் மற்றும் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன. இந்த விளாம்பழம் மற்றும் அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணம் உள்ளது.

குறிப்பாக விளாம் பழ விதையில் ஒலியிக், பால்மிடிக், சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும், இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதி பொருட்களும், பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளது.

விளாங்காயில் பி2 உயிர்சத்தும் உள்ளது. இத்தகைய மகத்துவமுள்ள விளாம்பழத்தை பயன்படுத்தி குளிர்ச்சி தரும் தேநீர் தயாரிக்கலாம்.

 இதன் கொழுந்து, இலை, காய், பிசின், பழம், ஓடு போன்ற அனைத்து பாகங்களும் மருந்துகளில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

‘விட்டதடி ஆசை விளாம்பழத்தின் ஓட்டோடு’ என்றொரு சொலவடை உண்டு. ‘பழத்தின் மீதான ஆசை, ஓட்டை பார்த்ததும் ஓடிவிட்டது’ என்பது இதன் அர்த்தம்.

விளாங்காய் ஓட்டோடு ஒட்டிய நிலையில் இருக்கும். பழுத்து பக்குவத்திற்கு வந்ததும் எடைகுறைந்து, உள்ளுக்குள்ளேயே ஓட்டைவிட்டு விலகி விடும். நன்கு பழுத்த பழம், புளிப்பு கலந்த இனிப்பு சுவைதரும். எண்ணற்ற விதைகள் இருக்கும். விதைகளும் சுவை பொருந்தியதுதான்.

விளாம்பழம் தசை வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை தருகிறது. ரத்தத்தை சுத்தம் செய்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. பசியை அதிகரிக்கிறது.

பித்தம் அதிகரிப்பதால் தலைவலி, கண்பார்வை மங்கல், இளநரை, ருசியின்மை போன்றவை ஏற்படும். அவைகளை இந்த பழம் போக்கும். இதில் புரதமும், தாது சத்துகளும் அதிகம் உள்ளதால், எலும்புகளை உறுதியாக்கும். ஞாபக சக்தியை மேம்படுத்தும். இதை ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவாக போற்றலாம்.

விளாம்பழத்திற்கு சளியை அகற்றும்தன்மை இருக்கிறது. அதனுடன் அரை தேக்கரண்டி திப்பிலி பொடி கலந்து சாப்பிட்டால், மூச்சிறைப்பு மற்றும் மேல்மூச்சு ஏற்படுதல், விக்கல் போன்றவை நீங்கும். தொண்டை நோய்களும் குணமாகும். கல்லீரலில் உள்ள பிரச்சினைகளை போக்கும் சக்தியும் விளாம்பழத்திற்கு இருக்கிறது.

பூச்சிகள் மற்றும் விஷஜந்துக்கள் கடித்த இடங்களில் விளாம்பழத்தை பிசைந்து பூசலாம். புறஊதா கதிர்களால் முகத்தில் உண்டாகும் கருத்திட்டுகளுக்கு பழக்கூழை பூசி, பத்து நிமிடங்கள் வைத்திருந்து முகம்கழுவவேண்டும்.

விளா மர கொழுந்தை அரைத்து ஐந்து கிராம் அளவு எடுத்து, 100 மி.லி. பாலில் கலந்து சுவைக்கு கற்கண்டு கலந்து பருகினால், இருமல் இளைப்பு, பித்தசூடு போன்றவை நீங்கும்.

விளா மர இளந்தளிரை அரைத்து 10 கிராம் அளவு எடுத்து, 200 மி.லி. மோரில் கலந்து காலை, மாலை இரு நேரம், மூன்று நாட்கள் பருகினால், வயிற்று நோய்கள் குணமாகும். கொழுந்தை அரைத்து சாறு பிழிந்து வேர்குரு மற்றும் கோடை கொப்பளங்கள் மீது பூசி குளித்தால், நிவாரணம் கிடைக்கும்.

விளாங்காயை நீரிலிட்டு அவித்து, ஓட்டை நீக்கிவிட்டு தசைப் பகுதியை எடுக்கவேண்டும். அதை கஞ்சியில் கலந்து குடித்தால் மூலநோய் கட்டுப்படும்.

காயின் தசையை அவிக்காமல் வெயிலில் காயவைத்து பாதுகாத்து, புளிக்கு பதிலாக காய்கறிகளுடன் கலந்து சாப்பிடும் பழக்கம் இலங்கை மக்களிடம் உள்ளது.

விளாம்பழத்தின் பிசின் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதில் சிறிதளவு எடுத்து, அரை தேக்கரண்டி வெண்ணெய்யுடன் கலந்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நீர்எரிச்சல், மாதவிடாய் நேரத்தில் உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும். அதில் சிறு துண்டை வாயில் இட்டு சுவைத்தால் இருமல் நிற்கும். விளாம்பழ ஓட்டை காயவைத்து தூளாக்கி, சீயக்காய் தூள் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், சூடு நீங்கும். முடி உதிராது. இளநரை மாறும்.

விளாம் மரங்கள் இப்போது அரிதாகிவிட்டன. அதன் பழங்களும் இப்போது பலராலும் உண்ணப்படுவதில்லை. விளாம் மரங்கள் அதிகம் வளர்க்கப்பட வேண்டும். இதன் பயன்பாட்டில் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். இந்த பழத்தில் ஜாம், ஜெல்லி, பழக்கூழ், ஜூஸ் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட உணவுகளை தயாரிக்க முடியும்.

தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.

 விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.

 தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.

 வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர, நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

 விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.

 தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.

 விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.

 விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.

 விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

 விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

 சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும், நன்கு பசிக்கும்.

விளாம்பழம் குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே கிடைக்கும்.   அதாவது ஆவணி மாதம் முதல் புரட்டாசி மாதம் வரைை மட்டுமே  கிடைக்கும்.

எனவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழி கொட்ப அந்தந்தப் பருவ காலங்களில் கிடைக்கும் இது போன்ற அரிதான மூலிகைத் தன்மை வாய்ந்த பழங்களை சாப்பிட்டு ஆரோக்கிய வாழ்வுக்கு நாம் வழிவகை செய்வோமாக…!

நோய் வருமுன் காப்போம்..!

நல்ல (உணவு) மருந்து…!

 நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி…. 7373141119

Leave a Reply

Your email address will not be published.