எம்.கே.தியாகராஜா பாகவதர் 111 வது ஆண்டு ஜனன தினம்.

இன்று ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜா பாகவதர் அவர்களின் 111 வது ஆண்டு  ஜனன  தினமாகும்.
எந்த நடிகருக்கும் இல்லாத பேரும் புகழும்
அடைந்தவர் எம்.கே.தியாகராஜா பாகவதர்.தங்கத் தட்டிலே உணவுண்டு,தங்க கின்னத்தில் நீர் அருந்தியவர்.இறுதிக் காலத்தில் பேரையும் புகழையும் தவிர அனைத்து சொத்துக்களையும் இழந்து சர்க்கரை நோயால் பெரும் அவஸ்த்தையுற்று அமரரானார்.
இவ்வுலகின் முதலும் கடைசியுமான ஒரே சுப்பர் ஸ்டார்
எம்.கே.தியாகராஜா பாகவதர் அவர்களே…
(பொற்கொல்லர்) விஸ்வகர்மா சமூகத்தைச் சார்ந்த
இவர் 01.03.1910 இல் கிருஷ்ணசாமி ஆச்சாரி மாணிக்கத்தம்மாள் இணையருக்கு மகனாக  தஞ்சை மாவட்டம் மாயவரத்தில்,(தற்போது மயிலாடுதுறை)பிறந்தார். பால்ய வயதிலிருந்தே நன்றாக பாடும் ஆற்றலும்  நல்ல குரல் வளமும் கொண்டவராக இருந்தார். 10 வயதிலேயே மேடைகளில் நடித்தும்,பாடியும் மக்கள் மத்தியில் பாராட்டுக்குரியவரானார்.இவருக்கு மேலும் சங்கீதத்தில் பயிற்சி அளிப்பதற்காக இவரது தந்தை ஆலத்தூர் ஸ்ரீனிவாசன் சுப்ரமணியம் சகோதரர்களிடம் சங்கீதம் கற்க சேர்த்து விட்டார்.அங்கு இவருக்கு நன்றாக பயிற்சி அளிக்கப்பட்டது.நன்கு தேர்ச்சி பெற்ற பின் 1930 களில் எந்த ஒரு நாடகக் குழுவிலும் இணையாமல் தனித்தே ஸ்பெஷல் நாடகங்களில் நடித்துப்பாடி புகழ் கண்டார்.இவர் கதாநாயகனாக நடித்த “பவளக்கொடி”நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போது வழக்கறிஞராக இருந்த கே.சுப்ரமணியம் இப்படத்தை திரைப்படமாக எம்.கே.தியாகராஜா பாகவதர் அவர்களையே கதாநாயகனாகவும்,எஸ்.டி.சுப்புலட்சுமியை கதாநாயகியாகவும் கொண்டு இதே பெயரில் தயாரித்து 1934 இல் வெளியிட்டார். படம் அமோக வெற்றி ஒரே படத்தின் மூலம் தியாகராஜா பாகவதர் புகழின் உச்சம் தொட்டார்.இப்படத்தில் மொத்தம் 30 பாடல்கள். பின் 1937 இல் “நவீன சாரங்கதாரா”இப்படமும் பாகவதருக்கு
வெற்றிப்படமாக இருந்தது.இப்படத்தில் இடம்பெற்ற “சிவபெருமான் கிருபை வேண்டும்”பாடல் பிரபலம்.பின் இதே ஆண்டில் திருச்சி தியாகராஜா டோக்கி பிஃலிம்ஸ் என சொந்தமாக சினிமா கம்பனி ஆரம்பித்து “சத்யசீலன்”என்ற படத்தை தயாரித்து வெளியிட்டு அமோக லாபம் கண்டார் பாகவதர். 1937 இல் பாகவதருக்கும், தமிழ்த்திரைக்கும் பெரும் திருப்பு முனையாக அமைந்தது,
ஆம் அவ்வாண்டில் இவர் கதாநாயகனாக நடித்த “சிந்தாமணி”  “அம்பிகாபதி”இரு படங்களும் வெளியாகி அமோக வெற்றி கண்டன.இப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள்
அனைத்தும் ரசிகர்களை பித்துப்பிடிக்கும்
அளவிற்கு கொண்டு சென்றது. இப்படங்களுக்குப் பின் இளைஞர்கள் இவரைப்போலவே சிகையலங்காரம்’ பாகவதர் கட்,பாகவதர் அங்கவஸ்திரம் ,
இவரைப்போலவே நெற்றியை மழித்து பாகவதர் பெஃஸன் என பெரும் விசிறிகளாய்
அழைந்தனர்.”சிந்தாமணி” படத்தில் லாபம் அடைந்த பட அதிபர்கள் மதுரையில் இதே “சிந்தாமணி” பெயரில் ஓர் பிரமாண்டமான தியேட்டரையே உருவாக்கியிருந்தனர்.அடுத்து மீண்டும் பாகவதருக்கு புகழையும்,வசூலையும்
வாரி வழங்கியது “திருநீலகண்டர்”என்ற வெற்றிப்படம்.இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் பாபநாசம்
திரு .சிவன் அவர்களின் கவித்துவத்திலும் இசையிலும் உருவாகி
பாகவதரின் காந்தக்குரலில்  அருமையாக
அமைந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.1941 இல் இவரின் நடிப்பில் உருவான மற்றொரு வெற்றி படம் “அசோக்குமார் “இப்படத்தில் இடம்பெற்ற “உன்னைக்கண்டு மயங்காத பேரும்  உண்டோ”பாடல்
பிரமாதம். இப்படத்தில் எம்ஜியார் பாகவதருக்கு நண்பராக நடித்திருப்பார்.
1943 இல் வெளியான இசைக் காவியமான “சிவகவி”இவரின் நடிப்பாற்றலுக்காகவும், இனிமையான பாடல்களுக்காகவும் வசூல் மழையில்
நனைந்தது .இதன் தயாரிப்பாளர் பட்சிராஜா ஸ்ரீராமுலு அவர்களுக்கு பெரும் லாபம் ஈட்டித்தந்த படம்.இப்படத்தில் இடம் பெற்ற “வள்ளலைப் பாடும் வாயால்”பாடல் மிகவும் பிரசித்தி அடைந்த பாடலாகும். இப்படத்திற்கு இசையமைத்தவர்
திரு. ஜி.ராமநாதன் அவர்கள்.  இப்படத்தில் பாகவதர் ஒரு இசை வேள்வியே நடத்தியிருப்பார்.”சொப்பன
வாழ்வில் மகிழ்ந்து ” “வதனமே சந்திரப்பிம்பமோ”போன்ற பாடல்கள் அருமை. 1944 இல் வெளியான “ஹரிதாஸ்”எம்.கே.தியாகராஜா பாகவதர் வாழ்வில் மட்டுமல்ல முழு இந்திய தேசத்திலும் பெரும் சாதனை படைத்தது. 1944,1945,1946,என சென்னை ப்ராட்வே தியேட்டரில் மூன்று தீபாவளிகள் கடந்து ஓடி ஓர் உலக சாதனையைப்படைத்தது.இன்று வரை இச்சாதனை முறியடிக்க படவில்லை. இப்படத்தில்  இடம்பெற்ற “வாழ்விலோர் திருநாள்” “மன்மத லீலையை வென்றார் உண்டோ”போன்ற பாடல்கள் பிரபலம்.
ராஜா அண்ணாமலைச் செட்டியார் உருவாக்கிய தமிழிசை இயக்கத்திற்கு பெருந்துணயாக இருந்தவர் தியாகராஜா பாகவதர்.தேசிய விடுதலைக்காக பெரும் நிதியை வழங்கியவர் பாகவதர்.தமிழ் நாட்டில் பல பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் பாகவதர். ஹரிதாஸ் படத்தின் வெற்றிக்குப்பின் பாகவதரின் வாழ்க்கை சோதனைக் களமாக
உருவானது.அந்நேரத்தில் இந்துநேசன் பத்திரிக்கை ஆசிரியர் லட்சுமிகாந்தன்
கொலை செய்யப்பட்டிருந்தார்.தங்களைப்பற்றி மோசமான விமர்சனங்களை எழுதியதால்
பாகவதரும்,என்.எஸ்.கிருஷ்ணனும் இணைந்தே இவரை கொலை செய்தனர்
என்ற கோணத்தில் வழக்கை ஜோடித்து ,இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்பட்டனர். பின் இருவரும் லண்டன் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து 1947 இல் விடுதலை ஆனார்கள்.இச்சம்பவத்தின் பின் பாகவதர் சினிமாவில் நடிப்பதை விரும்பவில்லை. மேடைக் கச்சேரிகளில்
மட்டுமே தனது பங்களிப்பை நல்கினார்.
இதனால் இவர் நடிப்பதாக இருந்த பில்ஹணன்,ஹரிச்சந்திரா,ஞானவள்ளல் போன்ற படங்கள் கைவிடப்பட்டன.பின் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று 1948 இல்  “ராஜமுக்தி”என்ற படத்தை தன் சொந்த படமாக தயாரித்து இவரே இயக்கினார்.இப்படத்தில் தான் நடிகை பானுமதி தமிழில் அறிமுகமானார்.
இவ்வருடம்தான் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.மகாத்மா மீது தீவிர பற்று கொண்டவர் பாகவதர். காந்தியின் மரணம் தியாராஜ பாகவதரை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. காந்தியைப் போற்றி இவர் பாடிய இரு பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது. 1952 இல் “அமரகவி”வெளியானது.இப்படத்தில் இடம்பெற்ற “யானைத்தந்தம் போலே பிறை நிலா”பாடல் அருமையாக அமைந்தது. இதன் பின் வெளியான “ஷியாமளா”படம் வெற்றி பெறவில்லை.
பாகவதரைத்தவிர மற்ற நடிக நடிகையர் அனைவரும் தெலுங்கு கலைஞர்கள்.
எனவே அந்நேரத்தில் அப்படத்தை தமிழ் நாட்டினர் ஏற்கவில்லை. எனினும்
பாடல் இசைத்தட்டு பாகவதர் குரலுக்காக அமோக விற்பனையானது.”ராஜன் மகராஜன்”பாடல் பிரமாதம்.இப்படத்தில் தான் பாகவதர் முதன்முதலாக மீசையுடன் நடித்திருப்பார். பின் நீண்ட இடைவெளிக்குப்பிறகு1957 இல்  “புதுவாழ்வு”வெளியானது. அதுவரை புராண இதிகாச படங்களில் நடித்த பாகவதர் இப்படத்தை சமூக படமாக உருவாக்கியிருந்தார். இப்படத்தை தியாகராஜா பாகவதரே இயக்கினார் .பாகவதரின் முழு சங்கீத ஆர்வத்தையும் இப்படத்தில் வாரி வழங்கியிருந்தார்.”சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா “பாடல் பிரமாதம்.பின் “சிவகாமி “என்ற படத்தில் நடித்து கொண்டிருந்த நேரத்தில் பாகவதர் சக்கரை வியாதியால் பெரும் அவஸ்தைக்குள்ளானார்.தான் குணமாக
வேண்டும் என திருச்சி மாரியம்மன் கோவிலில் பல மணி நேரம் பக்தி பாடல்களை பாடுவதில் ஈடுபட்டிருந்தார்
பாகவதர்.இறுதியில் உடல்நிலை மிகவும் மோசமான தருணத்தில் சென்னை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் சங்கீத சாம்ராஜ்யத்தை காப்பாற்ற முடியவில்லை. 1959 நவம்பர் முதல் திகதி இசையால் வேள்வி செய்த “ஏழிசை மன்னர் எம். கே.தியாகராஜா பாகவதர் என்ற, இவ்வையமே வியந்து போற்றிய இசைச்சிங்கம் தன் கர்ஜனையை தனது 49 வது அகவையில் நிறுத்திக் கொண்டது.இறக்கும் போது ஓம் நமசிவாய என இறைவனை பிரார்த்தித்தவாறு
இப் பெருங்கலைஞனின் ஆத்மா இறையுடன் கலந்தது .இவர் போல் ராஜவாழ்க்கை வாழ்ந்தோர் அக்காலத்தில் யாருமில்லை எனலாம்.
கடைசி வரை அனைத்து படங்களிலும் கதாநாயகனாகவே நடித்தார்.இவர் நடித்த “அம்பிகாபதி” மீண்டும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான போது கம்பர் வேடத்தில் நடிக்க இவரை அணுகவே,மறுத்து விட்டதார்.
இவரின் உணவுண்ணும் தட்டுகள்,குடிக்கும் குவளைகள் அனைத்தும் சொக்கத்தங்கத்தால் ஆனது. இந்திய அரசு இப்பெருந்தகைக்கு தபால்தலை வெளியிட்டு  கௌரவம் ஆற்றியது.
தமிழக அரசு பல வழிகளில் இவருக்கு சிறப்பாற்றியது. யுகங்கள் பல கடந்தாலும் ஏழிசை மன்னர்
எம். கே .தியாகராஜ பாகவதர் எனும் இசைச்சமுத்திரத்தின் புகழ் வற்றாத ஜீவநதியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அன்னாரின் ஜனன நாளான இந்நாளில் அவரைப் போற்றுவோமாக…இலங்கைக்கும்
விஜயம் மேற்கொண்டு பல நாடகங்களை
நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் அமைப்பினர் இவரின் புகழை இவ்வுலகிற்கு பறைசாற்றும் வண்ணம் பல வழிகளில் சிறப்பாற்றி வருகின்றமை வரவேற்புக்குரியதே..
தமிழ் நாட்டில் எம் கே. தியாகராஜா பாகவதர் அவர்களுக்கு பல நகரங்களில்
சிலை அமைந்துள்ளது பெருமைக்குரிய சிறப்பு…
ஆக்கம்:
ஸாஹித்ய ரத்னா
எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை

Leave a Reply

Your email address will not be published.