சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்.
தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் பழனிசாமி தாக்கல் செய்தார்.
மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில், ‘எம்பிசி-வி’ என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. இதில், சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன. 20% இட ஒதுக்கீட்டில் மீதம் உள்ள 2.5% மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீடு ஆகும்.
மேலும் தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்தது. அதன் அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், இந்த இட ஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதத்திற்குப் பின்னர் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் தெரிவித்துள்ளார். மேலும் சீர்மரபினருக்கு 7%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
செய்தி ரசூல்
தமிழ்மலர் மின்னிதழ்