25ல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்…

25ல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. உரையில் போக்குவரத்து துறையினரின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான அறிவிப்புகள் இல்லை. இதனால் வரும் 25ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஊதிய உயர்வு இல்லாமல் இருக்கின்றனர். அதேபோல அவர்களுக்கு முறையான ஓய்வூதியப் பலன்களும் கிடைப்பதில்லை. அதிகப்படியான வேலையையும் வாங்கிக் கொண்டு அதற்கேற்றவாறு ஊதியம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர். தற்காலிகப் பணியாளர்களுக்கும் பணி நிரந்தர ஆணை வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற விட்டால் வேலை நிறுத்தம் செய்வோம் என தொழிலாளர் நல ஆணையரிடம் தொழிற்சங்கத்தினர் மனு கொடுத்திருந்தனர். உடனே போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினருக்கும் அரசுக்கும் இடையே சுமுகமான பேச்சுவார்த்தை எட்டப்படவில்லை. இச்சூழலில் இன்று வெளியான பட்ஜெட்டிலும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தேர்தல் வேறு நெருங்கிவருவதால் அரசு இறங்கிவரும் என்ற நோக்கில் வேலைநிறுத்த ஆயுதத்தைப் போக்குவரத்து தொழிலாளர்கள் கையிலெடுத்துள்ளனர். மாநிலம் தழுவிய போராட்டம் என்பதால் அனைவரும் அதில் கலந்துகொள்வார்கள். 25ஆம் தேதி முதல் பேருந்துகள் ஓடாமல் பயணிகள் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள், மக்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக இருக்கிறது.

s.முஹம்மது ரவூப்
தமிழ் மலர் மின்னிதழ்
தலைமை செய்தி ஆசிரியர்,

Leave a Reply

Your email address will not be published.