தமிழக சட்டசபை – பார்வை
சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12 ஆயிரத்து 110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மேலும், பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை காலத்தை உயர்த்தும் சட்டமசோதாவும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்டமசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இடைக்கால பட்ஜெட் தாக்கல்
கடந்த 5-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்த நிலையில், கூட்டம் நிறைவடைந்தது. இந்த நிலையில், 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடுகிறது. கடந்த இரண்டு முறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றதுபோல், இந்த முறையும் அங்கேயே இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடைபெற இருக்கிறது. காலை 11 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 10-வது முறையாகும்.
கவர்ச்சிகரமான அறிவிப்புகளுக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. எனவே, வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.
சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், அது தொடர்பாக நிதித் துறைச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பார். மேலும், சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுவும் கூடி, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவெடுக்கும்.
கூட்டம் எத்தனை நாள் நடைபெறும்?
அனேகமாக, நாளை மறுநாள் (புதன்கிழமை) இடைக்கால பட்ஜெட் புத்தகத்தை உறுப்பினர்கள் படிப்பதற்கு வசதியாக விடுமுறை விடப்படும் என தெரிகிறது. தொடர்ந்து, 2 நாட்கள் கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. எனவே, அன்றைய நாட்களில், இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார். இறுதி நாளில், அவரது பதில் உரை இடம்பெறும்.
தலைவர்கள் படங்கள் திறப்பு
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை காலை 11 மணிக்கு 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், நாளை மாலை சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் வ.உ.சிதம்பரனார், டாக்டர் சுப்பராயன் மற்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.
ஏற்கனவே சட்டசபை மண்டபத்தில் 12 தலைவர்களின் படங்கள் இருக்கின்றன. தற்போது மேலும் 3 படங்கள் திறக்கப்படுவதன் மூலம், தலைவர்கள் படங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்கிறது.
செய்தி ரசூல்
தமிழ்மலர் மின்னிதழ்