குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறையில் தொடர்புடைய 20 பேரின் புகைப்படங்கள் வெளியீடு.

புதுடெல்லி:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி ஒன்றை நடத்தினர்.

இதில் பெரும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. போராட்டக்காரர்களுக்கும், டெல்லி போலீசாருக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. இந்த களேபரங்களுக்கு இடையே டெல்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் கொடியேற்றினர்.

இந்த வன்முறை சம்பவங்களில் போராட்டக்காரர்கள் தாக்கியதில் நூற்றுக்கணக்கான போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

எனவே இந்த வன்முறை தொடர்பாக போலீசார் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து தொடர்புடைய நபர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும் பலரை அவர்கள் தேடி வருகின்றனர்.

இதற்காக மேற்படி வன்முறை தொடர்பான வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து அதில் இருந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி செங்கோட்டை வன்முறையில் தொடர்புடைய 200 பேரின் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தன.

இதன் தொடர்ச்சியாக டிராக்டர் பேரணி வன்முறையில் ஈடுபட்ட மேலும் 20 பேரின் புகைப்படங்களை டெல்லி போலீசார் நேற்று வெளியிட்டனர். வன்முறையாளர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

செய்தியாளர் ரஹ்மான்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.