மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் முதியவர்கள், சிறுவர்கள் அனுமதி!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் 10 மாதங்களுக்கு பிறகு முதியவர்கள், சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று முதல் முழுமையாக அனைத்து கோபுரங்கள் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா தாக்கத்திற்கு பிறகு கோயிலுக்குள் அனுமதி இன்று சகஜ நிலைக்கு திரும்பியது, பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் மகத்தான ஆன்மிகத் தலம் மதுரை மீனாட்சியம்மன் கோயில். கொரோனா தொற்று எதிரொலியாக கடந்த ஆண்டு மார்ச் 20ம் தேதி முதல் மூடப்பட்டது. பக்தர்களுக்கான அனுமதியின்றி கோயிலில் பூஜைகள் மட்டுமே நடத்தப்ட்டு வந்தன. இந்நிலையில் கடந்த செப்.1ம் தேதி முதல் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மீனாட்சி கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயிலுக்குள் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.

மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் அனுமதிக்கென 5 வழிகள் இருந்த போதும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி என்பதால் அம்மன் சன்னதி கிழக்கு வாசல், தெற்குவாசல் வழியாக மட்டுமே பக்தர்களை அனுமதித்து வந்தனர். 10 வயது சிறுவர், சிறுமிகள், கர்ப்பிணி பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், கோயில் பொற்றாமரைக்குளம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் அமர்ந்து செல்லவும், அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகம் இன்று காலை முதல் சிறுவர்கள், முதியவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், மீனாட்சி கோயிலின் வடக்கு, மேற்கு கோபுரங்களும் நாளை முதல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து மீனாட்சி கோயிலுக்கு பக்தர்கள் வருகை, சாமி கும்பிடுவது உள்ளிட்டவைகள் சகஜ நிலைக்கு திரும்புகிறது. முகக்கவசம் அணிந்து வரவும். நுழைவிடத்தில் தானியங்கி சானிடைசரில் கைகள் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தேங்காய், பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு வரவும், அர்ச்சனைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறுவர்கள், முதியவர்கள் அனுமதி பக்தர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது. கோயில் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கவும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.