சசிகலா வரும் 17ம் தேதி தஞ்சாவூர் செல்ல உள்ளதாக தகவல்
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சென்னை திரும்பி உள்ள சசிகலா வரும் 17ம் தேதி தஞ்சாவூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளை சிறைத் தண்டனைக்கு பிறகு ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே, கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவர்களின் அறிவுரைப்படி ஒரு வாரம் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனையடுத்து, பிப்ரவரி 8ம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்ட அவருக்கு வழிநெடுகிலும் உற்சாகம் வரவேற்பு அளிக்கப்பட்டு 23 மணிநேரத்திற்கு பிறகு சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசி வீட்டில் தங்கியுள்ளார்.
பிப்ரவரி 9, 10, ஆகிய இரண்டு தேதிகளில் சிலரைச் சந்தித்தவருக்கு, நேற்று பிப்ரவரி 11ம் தேதி, உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதற்குத் தேவையான மருந்துகளை சசிகலா எடுத்துக் கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், வரும் 17ம் தேதி சசிகலா தஞ்சாவூர் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு 10 நாட்கள் ஓய்வெடுக்க உள்ளார். 10 நாட்கள் தங்கியிருக்கும் அவரது உறவினர்கள் பலரையும் சந்திக்கிறார். அதேபோல், தனது கணவர் நடராஜனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவும் திட்டமிட்டுள்ளார். மேலும், அவரது ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கக்கூடிய அதிமுக நிர்வாகிகளை அங்கு சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்