ட்விஸ்ட் கொடுத்த பிரேமலதா!!
சசிகலா சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் வசிக்கும் நிலையில், அவரை பிரேமலதா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருந்துவருவதாக பிரேமலதா உள்ளிட்டோர் கூறி வரும் நிலையில் தற்போது அதிமுகவினர் எதிரி எனக் கூறிவரும் சசிகலாவை அவர் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அதிமுகவிடம் 40 தொகுதிகளை கேட்டிருப்பதாக தெரிகிறது. அதற்கு அதிமுக ஒப்புக் கொள்ளாததால் அதிமுக – தேமுதிக கூட்டணியில் பிரச்னை எழுந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தேர்தலில் தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என கடுமையாக விமர்சித்தார். அதே சமயம் சசிகலா பூரண குணமடைந்து வரவேண்டும் எனவும் சசிகலா வருகையால் அதிமுக கட்சியில் பாதிப்பு என்பது உட்கட்சி விவகாரம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி விவகாரத்தில் தங்களை அழைத்து பேசததால் தேமுதிக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்