2 முறை ‘நீட்’ தேர்வு.

இந்த வருடம் முதல் ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு- மத்திய அரசு முடிவு

மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி:

எம்.பி.பி.எஸ். படிப்பின் சேர்க்கைக்காக தேசிய அளவில் ‘நீட்’ தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்றவற்றில் சேர்ந்து படிக்க ஜே.இ.இ. என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கிறது.

இதன் மூலம் மாணவர்கள் இரண்டு முறை தேர்வில் பங்கேற்கலாம். இதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதைக் கொண்டு இந்த தொழில்நுட்ப உயர்கல்வியில் சேர்ந்து படிக்கலாம். மாணவர்களின் மன உளைச்சலை போக்குவதற்காகவே இந்த நுழைவுத் தேர்வு வருடத்துக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. இதை 4 முறையாக மாற்றவும் திட்டமிட்டு இருப்பதாக மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இது போல் மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வையும் ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

தற்போது எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இனி வருடத்துக்கு 2 முறை நடத்தப்படும்.

நீட் தேர்வின் புதிய நடைமுறை இந்த வருடம் முதல் நடைமுறைக்கு வருகிறது. 2 நீட் தேர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதைக் கொண்டு மருத்துவ படிப்பில் சேரலாம். மாணவர்கள் சிறந்த முறையில் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். மன உளைச்சலை களைய வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு எழுதும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது என்று தேசிய தேர்வுகள் முகமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் நீட் தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வுகள் முகமை விரைவில் முடிவு செய்து அறிவிக்கும். பல மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, இந்த வருடம் 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி ரஹ்மான்.

Leave a Reply

Your email address will not be published.