உரிமை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
அயோத்தியில் மசூதிக்கு ஒதுக்கிய நிலத்தின் உரிமை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில், புதிதாக மசூதி கட்ட நிலம் ஒதுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. அதன்படி, அயோத்தி அருகே தான்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு மாநில அரசு ஒதுக்கியது.
இந்நிலையில், மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கோரி டெல்லியைச் சேர்ந்த ராணி கபூர், ராம ராணி பஞ்சாபி என்ற 2 பெண்கள் பிரயாக்ராஜ் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் கடந்த 3-ந் தேதி மனு தாக்கல் செய்தனர்.
அதில், 1947-ம் ஆண்டு தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த தங்கள் தந்தை கியான்சந்திர பஞ்சாபிக்கு தான்னிப்பூர் கிராமத்தில் 28 ஏக்கர் நிலம் 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டது. அதுதொடர்பான முறையீடு நிலுவையில் உள்ளபோது, குறிப்பிட்ட 28 ஏக்கரில் இருந்து 5 ஏக்கர் நிலத்தை வக்பு வாரியத்துக்கு அதிகாரிகள் ஒதுக்கிவிட்டனர் என தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கில் நேற்று ஆஜரான உத்தரபிரதேச மாநில அரசின் தலைமை வக்கீல் ரமேஷ்குமார் சிங், மனுவுக்கு எதிர்ப்பு கூறி, அதில் குறிப்பிடப்பட்ட நில எண்களும், மசூதிக்கு ஒதுக்கப்பட்ட நில எண்களும் வேறு வேறானவை என தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் எச்.ஜி.எஸ்.பாரிகரும், வழக்கை வாபஸ் பெற விரும்புவதாக கூறினார்.
அடிப்படை தகவல்களை சரிபார்க்காமல் மனு தாக்கல் செய்ததை கண்டித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.கே.உபாத்யாய், மணீஷ்குமார் ஆகியோர், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.