சட்டப்பேரவை தேதி ஒத்திவைப்பு.
சட்டப்பேரவை நிறைவு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று முடிந்தது. தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கடந்த 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக, கலைவாணர் அரங்கில் போதிய இடைவெளியுடன் பேரவை நடத்தப்பட்டது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுநர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வெளிநடப்பு செய்தனர். பின்னர் கூட்டத்தொடர் முழுவதும் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். அதனால் எதிர்க்கட்சிகள் இன்றிக் கூட்டம் நடந்தது.
அலுவல் ஆய்வுக் குழுவில் பிப்.5 வரை பேரவையை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.பிப்.3-ம் தேதி அன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பி, புற்றுநோய் நிபுணர் சாந்தா உள்ளிட்டோர் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 4-ம் நாள், 5-ம் நாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், அறிவிப்புகளும் வெளியாகின.
விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பதியப்பட்ட வழக்குகள் தள்ளுபடி, ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இன்று இடம்பெற்றன.
இதன் பின்னர் சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவு பெற்றது. தேதி குறிப்பிடப்படாமல் பேரவையை சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். இந்த மாதத்திலேயே இடைக்கால பட்ஜெட்டுக்காக மீண்டும் பேரவை கூட வாய்ப்புள்ளது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.