டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக…
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் விவசாயிகள் சார்பில், டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியை போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடுக்க முயன்றனர்.
போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அப்போது மத்திய டெல்லியின் மிண்டோ சாலையில் ஒரு டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல், அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது. உயிரிழந்த நபர் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் அருகே உள்ள டிப்டிபா கிராமத்தை சேர்ந்த 27 வயதான நவ்ரீத் சிங் என்று கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் நவ்ரீத் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, நேற்று அவர்களது வீட்டிற்கு சென்றார். மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு மற்றும் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களும் அவருடன் சென்றனர். அவர்கள் நவ்ரீத் சிங்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், அவருக்கு அஞ்சலியும் செலுத்தினர்