“டொமினிக் ஜீவா

இலங்கைத்திருநாட்டில் தன் பொன் எழுத்துகளால் சமூகப்புரட்சி ஏற்படுத்திய ஓர் சமூகப்படைப்பாளி “டொமினிக் ஜீவா “அவர்கள்.28.01.2021 அன்னார் இம்மண்ணை விட்டு மறைந்தார்.எழுத்துலகம் தன் எழுதுகோலை இழந்து விட்டது. எளிமையான தமிழ் நடையில் பாமரனுக்கும் புரியும் வண்ணம் திரு.ஜீவா அவர்களின் எழுத்துகள் விளங்கின.யாழ்மண்ணில் ஓர் வறுமை நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் ஜீவா.
யாழ் சென். மேரிஸ் கல்லூரியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றார்.
வறுமையின் கோரப்பிடி காரணமாக பள்ளிப்படிப்பை இடை நிறுத்தி,தன் தந்தை நடத்தி வந்த சவரத்தொழிலை தொடர்ந்தார்.பொதுவுடைமை சிந்தனையில்
ஊறிய ஜீவா ஒரு கட்டத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டார். இக்கட்சியின் இணைந்து மூலம்
பொதுவுடைமை சித்தாந்தங்கள் கொண்ட நூல்களை படிக்கும் வாய்ப்பு ஜீவாவுக்கு கிடைத்தது. இவருடைய முதல் சிறுகதை 1948 இல் தமிழரசு கட்சியின் சுதந்திரன் நாளேட்டில் வெளியானது.ஓர் சாதாரண சவரத்தொழில் மேற்கொள்ளும் ஜீவா விற்கு இவ்வாய்ப்பு கிடைத்ததையிட்டு யாழ்மண்ணில் மேல்மட்ட படைப்பாளிகள் மத்தியில் எப்படியான உணர்வுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை யூகிக்க முடிகின்றது .இவரின் எழுத்துக்களில் தமிழகத்தின் பாதிப்புகள் நிச்சயம் இருக்காது.தாய் நாட்டுச் சூழலுக்கேற்றவாறு
கடைசிவரை தன் எழுத்தாளுமையை தக்க வைத்துக் கொண்டவர் ஜீவா. ஈழத்து மக்களின் வாழ்க்கை நிலையை தன் எழுத்தின் வாயிலாக படம் பிடித்து காட்டியவர் ஜீவா. 1960 இல் சரஸ்வதி இதழில் இவரின் “தண்ணீரும் கண்ணீரும்”
என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்தது.சாகித்ய விருதினை முதலில் பெற்ற பெருமைக்குரியவர் ஜீவா. இது யாழில் ஒரு சில
புலமையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இவருக்கு வழங்கிய சாகித்ய விருதுக்கு எதிராக போராட்டமும் செய்தனர்.
இலக்கிய உலகில்கூட அப்போதைய ஒரு சில தமிழர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டனர் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும். இந்நிலையில் நவீன சிறுகதை நூலுக்கான
அரச விருது ஜீவாவிற்கு கிடைத்தது. விருதுடன் யாழ் திரும்பிய ஜீவாவை, யாழ் மாநகர சபை முதல்வர் புகையிரத நிலையத்தில் மலர்மாலை சூட்டி வரவேற்றார்.சரஸ்வதி நாளிதழ் நின்றபின் “தாமரை” இதழ் ஜீவாவின் படைப்புகளுக்கு அடைக்கலம் வழங்கியது.முன் அட்டையில் ஜீவாவின் படத்தை பிரசுரித்து சிறப்பு வழங்கி கௌரவம் செய்தது.1966 இல் இவரை தலைமை ஆசிரியராகக் கொண்டு “மல்லிகை “இதழ் வெளிவரத் தொடங்கியது. சுமார் 46 வருட காலமாக மல்லிகையை மணக்க வைத்து வாசகர்கள் மத்தியிலும்,இதழியலிலும் புகழ் கண்டார் ஜீவா.இதன் பிறகே டொமினிக் ஜீவா
“மல்லிகை ஜீவா” ஆனார்.எழுத்தில் மட்டுமல்லாது தனது சிறந்த இலக்கிய பேச்சாற்றல் மூலம் சிந்தனையைத் தூண்டும் வகையில் பேரறிஞர் அண்ணாவைப் போல் முழங்கக்கூடியவர் திரு. ஜீவா அவர்கள். 2005 ஆம் ஆண்டு உயர் இலக்கிய விருதான சாகித்யரத்னாவை அரசு வழங்கி கௌரவம் செய்தது.தனது 94 வது அகவையில் “படைப்புத்திலகம்”தன் எழுதுகோலின் முனையை முறித்துக் கொண்டது.அன்னாரின் ஈடற்ற இப்பேரிழப்பிற்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளைஇலங்கை..

செய்தி விக்னேஸ்வரன்

Leave a Reply

Your email address will not be published.