டி.குன்னத்தூரில் ஜெயலலிதா கோவில் நாளை திறப்பு: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு.
மதுரை:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் பொதுமக்கள் வழிபடும் வகையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு கோவில் கட்டும் பணி நடந்தது.
12 ஏக்கர் சுற்றளவில் நடுமையமாக காண்போர் வியக்கும் வகையில் பல்வேறு கலை அம்சத்துடன் கட்டப்பட்டுள்ள ஆலயத்தின் மூலவராக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் 7 அடி உயர சிலையை பொங்கல் அன்று வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஒவ்வொரு சிலையும் 400 கிலோ எடை உள்ளது. ஆலயத்தின் கோபுரத்தில் சிறப்பு கலசங்கள் வைக்கப்பட உள்ளன.
இந்த கோவிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நாளை (30-ந் தேதி) திறந்து வைக்கின்றனர்.
இதற்காக யாகசாலை அமைக்கப்பட்டு அதில் 11 ஹோம குண்டங்கள் வடிவமைக்கப்பட்டு, இதில் 21 சிவாச்சாரியார்கள் கடந்த 28-ந்தேதி யாக சாலை பூஜையை தொடங்கி வைத்தனர். இந்த யாக சாலை பூஜை நாளை அதிகாலை வரை நடைபெறுகிறது. புனிதநீர் கலசத்தில் தெளிக்கப்படுகிறது.
இந்த கோவிலை தரிசிக்க பரமக்குடி, சோழவந்தான், வாடிப்பட்டி போன்ற பல்வேறு பகுதியில் இருந்து பாதயாத்திரையாக அ.தி.மு.க. நிர்வாகிகள் நடந்து வருகின்றனர்.
இதற்கான ஏற்பாட்டினை செய்து வரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இதற்காக காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்.
யாகசாலை பூஜையை தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
உலகமெங்கும் வாழும் தமிழ்ச் சமுதாயத்தின் தெய்வங்களாக பாரத ரத்னா புரட்சித்தலைவர், தமிழர் குலசாமி புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் மக்கள் மனதில் வாழ்ந்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் தியாகத்தை வரலாற்றை உலகுக்கு உணர்த்தும் எண்ணமும், ஒன்னறை கோடி கழகத் தொண்டர்களின் குல தெய்வமாக திகழும் ஜெயலலிதாவின் 8-வது அதிசயமாக 80 கோடி செலவில் சென்னையில் நினைவிடத்தை பீனிக்ஸ் பறவை வடிவமைப்பு போல் முதலமைச்சர் திறந்து வைத்தார். அவருக்கு பேரவை சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜெயலலிதாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் கழக பேரவையின் சார்பில் திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குன்னத்தூரில் மக்கள் வழிபடும் வகையில் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் மூலவராக எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரை உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த கோவிலை நாளை காலை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திறந்து வைக்கின்றனர். இதில் துணை ஒருங்கிணைப்பாளர்களும், அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
அன்று கோ (பசு) பூஜை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 120 நிர்வாகிகளுக்கு கோ தானத்தை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வழங்குகின்றனர். அதனை தொடர்ந்து யாகசாலை பூஜையில் பங்கேற்று தமிழகம் முழுவதும் உள்ள 234 நலிவடைந்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பொற்கிழி வழங்குகின்றனர்.
ஜெயலலிதா பேரவையின் சார்பில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதலமைச்சர் பெயரில் ஒரு கார் பரிசும், சிறந்த காளைக்கு துணை முதலமைச்சர் பெயரில் ஒரு கார் பரிசும் வழங்குகிறார்கள்.
கோவிலை திறந்து வைத்து எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பல்வேறு வகையான மரக்கன்றுகளை முதல்வரும், துணை முதல்வரும் நடுகின்றனர்.
ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சரும், துணை துணை முதலமைச்சரும் பங்கேற்று பேசுகிறார்கள். இதில் தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.
இந்த கோவில் அமைப்பதற்கு உரிய அனுமதியும், அரசாணையும் வழங்கிய முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கழக பேரவை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர் ரஹ்மான்