பிப்ரவரியில் ரெயில் போக்குவரத்து தொடக்கம்
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோநகர் இடையே பிப்ரவரி மாதம் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய இருக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சென்னை:
சென்னையில் வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோநகர் வரை மெட்ரோ ரெயிலுக்கான விரிவாக்கப்பணிகளை, கடந்த 2016-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதில், சுரங்கப்பாதையில் தியாகராஜர் கல்லூரி, தண்டையார்பேட்டை ஆகிய இரண்டு ரெயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய 6 மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஜூன் மாதம் ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்தநிலையில் தற்போது பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மாதம் டீசல் என்ஜின் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தினசரி மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோநகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 770 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் சேவைக்கான 2 ரெயில் பாதைகள், ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து இரண்டு பாதைகளிலும் டீசல் என்ஜின் சோதனையும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மெட்ரோ ரெயில் சோதனை இரவு நேரங்களில் நடந்து வருகிறது.
சிக்னல் சோதனை முற்றிலுமாக முடிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வு குறிப்புகள் எடுக்கப்பட்டு சிக்னல் அமைத்து தந்த ஜெர்மனி நிறுவனத்துக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூடுதலான வசதிகள் தேவைப்பட்டால் அவற்றையும் அமைத்து தருவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ரெயிலை பொறுத்த வரையில் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. எனவே அதற்கு முன்பாகவே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு தேவையான அனைத்து தரவுகளும் பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதனை ஏற்று ஓரிரு நாட்களில் பாதுகாப்பு ஆணையர் குழுவினர் சென்னைக்கு வந்து வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோநகர் இடையே ஆய்வு செய்ய உள்ளனர். தொடர்ந்து ரெயிலை இயக்குவதற்கான அனுமதியையும் பாதுகாப்பு ஆணையர் வழங்க இருக்கிறார். இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் பாதியில் ரெயிலை இயக்க திட்டமிட்டு உள்ளோம்.
பிப்ரவரி மாதத்தில் இருந்து வடசென்னையையும், தென்சென்னையையும் மெட்ரோ ரெயில் மூலம் இணைக்கப்படும். இதன் மூலம் திருவொற்றியூரில் இருந்து விமான நிலையத்துக்கு ஒரு மணிநேரத்தில் சொகுசு பயணம் மேற்கொள்ள முடியும். மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையம் அமைக்கும் போது சேதமடைந்த திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சீரமைப்பு, நடைபாதை, சாலையின் மத்திய தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் அந்தப்பணிகள் முழுமை பெறும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
செய்தியாளர் ரஹ்மான்