டெல்லி போலீஸ் 22 வழக்குகள் பதிவு.
விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்ற போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதியில் இருந்து பேராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்தனர். டெல்லி போலீசாரும் அனுமதி அளித்தனர்.
மூன்று வழிகளில் பேரணி நடத்த டெல்லி போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் விவசாயிகளின் ஒரு குழுவினர் தடுப்புகளை அகற்றிவிட்டு டெல்லிக்குள் நுழைந்தனர். அப்போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் விவசாயிகளும், போலீசாரும் காயம் அடைந்தனர்.
டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்து, அங்குள்ள கோபுரத்தில் விவசாய கொடிகளை ஏற்றினர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தியும் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். விவசாயிகளும் காயம் அடைந்தனர்.
செய்தியாளர் ரஹ்மான்