சசிகலா விடுதலை! டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்பு?
சசிகலா வரும் 27 -ம் தேதி விடுதலை ஆகிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய தண்டனைக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அபராதத் தொகையை அவர் செலுத்தியுள்ளதால் ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என கூறப்பட்டது.
விசாரணையின் போது 129 நாட்கள் சசிகலா சிறையில் இருந்ததால் அந்த நாட்களை தண்டனைக் காலத்தில் கழித்துக் கொள்ள வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் சசிகலா தரப்பு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் ஜனவரி 27 -ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் வெளியானதால் அவரை வரவேற்க அமமுகவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஆனால், திடீர் திருப்பமாக, சசிகலா உடல் நலம் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், சசிகலாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது. இதை தொடர்ந்து சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா உடல் நலம் தேறிவருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சசிகலா வரும் 27 -ம் தேதி விடுதலை செய்யப்படுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த தகவலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் உறுதிபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் வரும் 27-ம் தேதி அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்