சசிகலா சுயநினைவுடன் உள்ளார் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை?
பெங்களூரு: சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று முன் தினம் மாலை சுவாசப் பிரச்சனை காரணமாக பெளரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா உயர் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு நேற்று பிற்பகல் மாற்றப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தொற்று மேலும் பரவாமல் இருக்கும் வகையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை தரப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் ஆர்.டி. பிசிஆர் சோதனை முடிவின் அடிப்படையில் சசிகலாவுக்கு கொரோனா இருப்பது நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைகள் தொடர்ந்து வருகின்றன.
சசிகலாவுக்கு கொரோனா என்ற செய்தி வெளியானது முதல் அவரது ஒட்டுமொத்த குடும்ப உறவுகளும் பெங்களூரில் மையம் கொண்டுள்ளன. மறைந்த ம.நடராஜனின் சகோதரர்கள் பழனிவேல், ராமச்சந்திரன் தொடங்கி திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் வரை பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள்.
இது ஒரு புறமிருக்க அமமுகவின் முன்னணி நிர்வாகிகள் அனைவரும் பெங்களூருவில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அங்கு டிடிவி தினகரனை சந்தித்து சசிகலா உடல்நிலை பற்றி விசாரித்த வண்ணம் உள்ளனர்.
இதனால் சசிகலா உடல்நிலை விவகாரத்தில் மிகுந்த வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொள்ளும் விதமாக அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் விக்டோரியா மருத்துவமனை தரப்பில் இருந்து அவ்வப்போது அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதன்படி இன்று மாலை 6 மணிக்கு வெளியான அறிக்கையில், சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Pulse: 67/min
BP : 126/60mm Hg
Respiratory rate: 20-24/min
Sp O2: 98% with 5L NRBM என்ற சசிகலாவின் உடல்நிலை குறித்த தற்போதைய நிலவரத்தை விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.