ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு?
தலைமைச் செயலாளர் சண்முகம் IAS அலுவலர்கள் தங்கள் சொத்து விவரங்களை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் சண்முகம் IAS அலுவலர்களுக்கு சொத்து விவரத்தை சமர்பித்தல் தொடர்பாக கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “கடந்த 2011ம் ஆண்டிலிருந்து IAS அலுவலர் பணியில் இருப்பவர்கள் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் பெயரிலும் மற்றும் பிற தனிநபர் பெயரில் இருக்கும் அசையாத சொத்துக்ளின் விவரங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது நடைமுறையில் இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் IAS அலுவலர்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தை நிரப்பி அவர்களின் அசையாத சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் சொத்து விவரங்களை சரியான காரணம் ஏதுமில்லாமல் தெரிவிக்க மறுக்கும் IAS அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பணியாளர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக IAS அலுவலர்கள் தங்களது சொத்து விவரங்களை எலக்ட்ரானிக் முறையிலோ அல்லது கையால் நிரப்பப்பட்ட படிவங்களை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலமோ அனுப்பலாம்.
ஆன்லைன் முறையில் அனுப்புவதற்கான வசதி வருகிற ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு காலாவதியாகிவிடும். எனவே ஜனவரி 31 க்குள் IAS அலுவலர்கள் மத்திய அரசு அறிவித்த முறையில் தங்களுடைய அசையா சொத்து விவரங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் சொத்து விவரங்களை மாநில அரசுக்கோ அல்லது பணியாளர் நலத்துறைக்கோ தனிப்பட்ட முறையில் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.