பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி.

பிரிஸ்பேன், 

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில 336 ரன்கள் சேர்த்தது.

33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 294 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இதனால் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிரிஸ்பேன் மைதானத்தில் 328 ரன்கள் மிகப்பெரிய இலக்கு என்பது மிகக்கடினம் என்ற நிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்தியா 1.5 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருக்கும்போது நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஆட்டம் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 21 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். ஒரு பக்கம் புஜாரா நிலைத்து நிற்க மறுபக்கம் ஷுப்மான் கில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் விளாசினார்.

அவர் 90 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது அரைசதத்தாலும், புஜாராவின் நிதான ஆட்டத்தாலும் இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது 62 ஓவர்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் தேவையிருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஷுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவும் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மான் கில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 132 ரன்கள் எடுத்திருந்ததது.

அடுத்து வந்த ரஹானே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாட முடிவு செய்தார். ஆனால் 22 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்தியா தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அப்போது இந்தியாவின் வெற்றிக்கு குறைந்தது 37 ஓவரில் 145 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட் இருந்தது. தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது.

ரிஷப் பண்ட், புஜாரா அபாரமாக விளையாடினர். அரைசதம் அடித்த புஜாரா 211 பந்தில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 100 பந்தில் அரைசதம் அடித்தார்.

புஜாரா ஆட்டமிழந்த பிறகு மயங்க் அகர்வால் களம் இறங்கினார். ஒருபக்கம் அடித்தும் விளையாட வேண்டும். அதேசமயம் விக்கெட்டும் இழக்கக் கூடாது என்ற நிலை ரிஷப் பண்ட்-க்கு ஏற்பட்டது.

மயங்க் அகர்வால் 9 ரன்னில் வெளியேற ரிஷப் பண்ட்-க்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி 8 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டது. கம்மின்ஸ் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை ஊட்டினார்.

இதனால் கடைசி 7 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 7-வது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் 6 ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது.

6-வது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. கடைசி 5 ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் வாஷிங்டன் சுந்தர் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஆட்டமிழந்தார். என்றாலும் அவர் 29 பந்தில் 21 ரன்கள்  எடுத்தார். அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். இந்த ஓவரில் ஐந்து ரன்கள் கிடைத்தது. 

கடைசி 4-வது ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது ஓவரை ஹசில்வுட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தில்  ஷர்துல் தாகூர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தை ரிஷப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

செய்தியாளர் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published.