டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை:

செங்கல்பட்டு அருகே உள்ள இரும்பேடு கிராமம் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்.

இவர் பாலூர் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். தினமும் இரவில் கடை யில் வசூலாகும் பணத்தை பையில் வைத்து மோட்டார்சைக்கிளில் எடுத்து செல்வது வழக்கம்.

நேற்று இரவும் இதே போன்று டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து சுரேஷ்குமார் எடுத்து சென்றார்.

சுரேஷ்குமார் தனது ஊரான இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த நண்பர் சங்கருடன் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றார். சுரேஷ்குமார் மோட்டார்சைக்கிளை ஓட்டினார். சங்கர் பின்னால் அமர்ந்திருந்தார். நேற்று இரவு 9 மணியளவில் பவுஞ்சூரில் இருந்து செய்யூர் செல்லும் வழியில் அம்மனூர் கிராமம் வழியாக இருவரும் சென்று கொண்டிருந்தனர்.

அம்மனூர் கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவில் அருகில் புத்தூர் செல்லும் சாலையில் மோட் டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் திடீரென வழிமறித்தது.

அவர்களில் ஒரு மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கிய 2 பேர் திடீரென சுரேஷ்குமாரை சரமாரியாக தாக்கினர்.

இதில் சுரேஷ்குமார் நிலைகுலைந்தார். அப்போது தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். அப்போது இடது கையால் சுரேஷ்குமார் தடுத்தார்.

இதில் கை மணிக்கட்டில் பலத்த வெட்டு விழுந்தது. இதன் பின்னரும் இருவரும் சுரேஷ்குமாரை விடாமல் வெட்டினார்கள். இதில் மூக்கு, கழுத்து, இடது கண் புருவம் ஆகிய இடங்களிலும் சரமாரியாக வெட்டு விழுந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ்குமார் மயங்கி கீழே விழுந்தார். இதனை பயன்படுத்தி கொள்ளையர்கள் 4 பேரும் ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தில் சுரேஷ்குமாருடன் சென்ற சங்கர் மீது தாக்குதல் நடைபெறவில்லை.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் செய்யூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சுரேஷ் குமாரை மீட்டு செய்யூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டன.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சுரேஷ்குமார் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் சூப்பர்வைசரை வெட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் செய்யூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை போலீசார் 4 கொள்ளையர்களையும் பிடிக்க தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

தப்பி சென்ற கொள்ளையர்கள் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

சுரேஷ் குமார் தினமும் டாஸ்மாக் கடையில் இருந்து பணம் எடுத்துச் செல்வதை நோட்டமிட்டு திட்டம் போட்டு கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published.