ஸ்டார்ட் அப் நிறுவனம் எலக்ட்ரிக் டிராக்டரை அறிமுகம்!
விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தற்போது எலக்ட்ரிக் டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து துறைகளின் மேம்பாட்டிலும் தொழில்நுட்பம் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, மனிதர்களின் வேலையை எளிதாக்குவதற்கு தொழில்நுட்பம் அதிகம் உதவுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தலைநகர் டெல்லியில் தானியங்கும் மெட்ரோ ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், விவசாயிகள் தங்கள் பணியை மேலும் எளிதாக்கும் வகையில் Monarch Tractor என்ற எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் டிராக்டர் 40 குதிரைத்திறன் கொண்டது.
மேலும், 70 குதிரைத்திறன் வரை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரியை மாற்றும் வசதியும் இந்த டிராக்டரில் காணப்படுகிறது. உங்களுக்கு தேவையான வேகத்தில் இயக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், ஓட்டுநர் இல்லாமல் கூட இதனை இயக்க முடியும். இதில் சென்சார் மற்றும் கேமரா வசதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயிகள் பூச்சி மருந்து தெளிப்பதற்கும் இந்த டிராக்டரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோன்ற தொழில்நுட்பங்களால் விவசாயத்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.