தமிழக காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!
அடிதடி, மோதல், தகராறு என பாதிப்புக்கு உள்ளாகும் பொது மக்கள் அழைத்த இடங்களுக்கு 6 நிமிடங்களுக்குள் ரோந்து போலீஸார் சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என போலீஸாருக்கு காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உட்பட அனைத்து வகையான குற்றச்செயல்களையும் தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் பொது மக்களின் அவசர அழைப்புக்கு அழைத்த இடம் தேடிச் சென்று உதவும் வகையில் போலீஸாரும் தயார் நிலையில் இருக்கும்படி ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள 12 காவல் மாவட்டங்களுக்கும் தலா ஒரு காவல் நிலையத்துக்கு தினசரி சுற்றுக்காவல் ரோந்து வாகனம், கூடுதல் சுற்றுக்காவல் ரோந்து வாகனம், ஜிப்சி ரோந்து வாகனம் மற்றும் சிறப்பு சுற்றுக்காவல் வாகனம் என 4 வகையான ரோந்து வாகனங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இப்படி மொத்தம் 353 ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
மேலும் அடிதடி, மோதல், தகராறு உட்பட அனைத்து புகார்களின் பேரில் 100-க்கு பொதுமக்கள் அழைத்த 6 நிமிடங்களுக்குள் ரோந்து போலீஸார் செல்ல வேண்டும். அதன்பிறகு நடந்த விபரங்களை காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். சம்பவ இடத்திலேயே தீர்த்து வைக்கக் கூடிய பிரச்சினைகளை அங்கேயே தீர்த்து வைக்க வேண்டும். தீர்க்க முடியாத பிரச்சினைகளை காவல் நிலையம் அழைத்துச் சென்று தேவைப்பட்டால் வழக்குப் பதிந்து பிரச்சினைக்கு உரிய சட்ட ரீதியிலான தீர்வை வழங்க வேண்டும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்