ஜனவரி 21-ல் கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் உதயம்?

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, கலைஞர் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் புதிய கட்சியை ஜனவரி 21-ல் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த போது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டார் மு.க. அழகிரி. தமது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க அழகிரி மேற்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை. இதனால் அமைதியாக இருந்துவிட்டார் அழகிரி.

மீண்டும் அழகிரி

தமிழக சட்டசப்பை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் மீண்டும் மு.க.அழகிரி பேட்டி கொடுப்பது, ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவது என பிஸியாகிவிட்டார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார்; அவருடன் கூட்டணி அமைக்கலாம் என்பதுதான் அழகிரியின் திட்டமாக இருந்தது.

கைவிட்ட ரஜினி

ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமலே அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டார். இதனால் அழகிரி தரப்பு என்ன செய்வது என தெரியாமல் தவித்தது. இந்த நிலையில் அழகிரி தனிக்கட்சி தொடங்கித்தான் ஆக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

கலைஞர் திமுக
இதனையடுத்து கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் (கலைஞர் திமுக) என்ற புதிய கட்சியை தொடங்குவது என அழகிரி முடிவு செய்துள்ளாராம். இது தொடர்பான அறிவிப்பு வரும் 21-ந் தேதி வெளியாகும் என்கின்றன மதுரை தகவல்கள்.

தனித்து போட்டியா?

அழகிரியின் கலைஞர் திமுக தனித்து போட்டியிடுமா? தென்மாவட்டத்தில் திமுக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்து போட்டியிடுமா? என்பது தெரியவில்லை. ஏற்கனவே திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்களை களமிறக்கியவர் என்கிற வரலாறும் அழகிரிக்கு உண்டு என்பதையும் அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.