நட்சத்திரங்களின் மகிமை

ஒருவன் பிறக்கும்போதே நட்சத்திரத்துடன் இணைகிறான். அவனுக்கு உலகத் தொடர்பையும் நட்சத்திரமே ஏற்படுத்துகிறது. பிறந்த குழந்தையின் காதில், நட்சத்திரத்தின் பெயரை ஓதுவான் தகப்பன் (நக்ஷத்ரநாமசநிர்திசதி…). அதையொட்டியே, பஞ்சாங்கங்களில் நட்சத்திரத்தை வைத்து, பெயரின் முதல் எழுத்துக்களின் அட்டவணைகள் சேர்க்கப்பட்டன. நட்சத்திரப் பெயருடன் இணைந்தபடி, நாம் வைக்கிற பெயர்களுக்கு உயிரோட்டம் இருக்கும்.

இன்ன நட்சத்திரத்தில், இன்ன ராசியில், இன்ன பெயரில் இருப்பவரின் நன்மைக்காக… என்று அர்ச்சகர், நட்சத்திரத்தின் பெயரையும் இணைத்து சங்கல்பம் சொல்லி, அர்ச்சனை செய்வார்.
ஒளி வடிவில் இயங்கிக் கொண்டிருப்பது நட்சத்திரம். எனவே, இந்த ஒளியின் பிறப்பில் இணைந்த மனிதன், உலகின் எல்லாப் பொருள்களுடனும் தனது இணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான்.

நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள் இணைந்த ஓடுபாதையில் பயணிக்கின்றன. ஒளியின் இணைப்பில் சைதன்யம் பெற்று, நம்முடைய கர்மவினையை எடுத்து விளக்குவதால், அவற்றுக்குக் கிரகங்கள் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது வேதம் (கிருஹ்ணாதீதிக்ரஹ;)

நட்சத்திரங்களுக்கு கிரகங்களுடனும், கிரகங்களுக்கு அகண்ட விண்வெளியுடனும் தொடர்பு உண்டு. அந்த விண்வெளி, உடலுக்குள் இருக்கும் விண்வெளியுடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்தத் தொடர்பு மனம் வரை நீடித்திருக்கும்; தந்தை ஓதிய நட்சத்திரத்தின் பெயர், காதினுள் இருக்கிற இடைவெளியில் புகுந்து, மனத்தை எட்டிவிடும். மனிதனை ஆகாயத்தில் இருக்கிற நட்சத்திரத்தில் இணைந்தவனாகச் சித்திரிக்கிறது சாஸ்திரம். காலத்துடன் இணைந்த கர்மவினையைத் தருணம் வரும்போது வெளிப்படுத்தும் நவக்கிரகங்களின் தசைகளைப் பட்டியலிட்டு வரையறுப்பது, அவனுடன் இணைந்த நட்சத்திரமே!

அசுவினியில் ஆரம்பித்து ஒன்பது நட்சத்திரங்களுக்கு எண்ணிக்கையை வைத்துப் பலனை அறிமுகம் செய்த வேதாங்க ஜோதிடம்,
27-ல் மிச்சமிருக்கும் இரண்டு ஒன்பது ஒன்பதான நட்சத்திரங்களுக்கும், அதே பலனை எடுத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கிறது.

அதாவது மூன்று தொகுப்பு.

முதல் தொகுப்பு: அசுவினி முதல் ஆயில்யம் வரை; இரண்டாவது தொகுப்பு மகம் முதல் கேட்டை வரை; மூன்றாவது தொகுப்பு மூலம் முதல் ரேவதி வரை. இந்த மூன்று தொகுப்புகளின் முதலாவது வரும் மூன்று நட்சத்திரங்களுக்குக் குறிப்பிட்ட தசையை அறிமுகம் செய்தது அது.

முதலாவது தொகுப்பில் முதல் நட்சத்திரம் அசுவினி. 2-வதில் முதல் நட்சத்திரம் மகம், 3-வதில் முதல் நட்சத்திரம் மூலம். ஆக, அசுவினி, மகம், மூலம் என்கிற மூன்றில் கேது தசை என அறிமுகமானது. இப்படியே ஒவ்வொரு தொகுப்பிலும் இரண்டாவது, மூன்றாவது வரிசையில் வரும் நட்சத்திரங்களைக் கணக்கிட்டு மற்ற கிரகங்களின் தசா காலங்களையும் வரையறுத்துள்ளது.

இப்படி, நட்சத்திரம் ஒருவனது தசா கால அட்டவணையை நிர்ணயிக்கிறது. நல்லது- கெட்டது என மாறி மாறி வருகிற தசா காலத்தை, அவன் கர்மவினைக்குத் தக்கபடி, அவன் பிறந்த வேளையில் இணைந்த நட்சத்திரம் அமைத்துக் கொடுப்பதாகத் தெரிவிக்கிறது ஜோதிடம்.

Astro Selvaraj Trichy
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.