அதிமுக தலைமை கழகம் முக்கிய அறிவிப்பு !
அதிமுக தலைமை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவர் ‘பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 104-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 17.1.2021 – ஞாயிற்றுக் கிழமை முதல் 19.1.2021 செவ்வாய்க் கிழமை வரை மூன்று நாட்கள், ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 104 – ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் மாவட்டங்களிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா ஆகிய பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.
கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் அனைவரும், தத்தமது மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தை, கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஒட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 104 – ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், “புரட்சித் தலைவி நமது அம்மா நாளிதழுக்கும்” அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
கழகத்தின் சார்பில் நடைபெறும் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறும் வகையில், அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
கழக ஒருங்கிணைப்பாளர் கழகப் பொருளாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் கழக தலைமை நிலையச் செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.