இன்று சுவாமி விவேகானந்தரின் 158ம் ஆண்டு ஜனன தினம்.
உலகின் பல்வேறு தேசங்களுக்கு சென்று இந்து மதத்தின் தத்துவார்த்த மேன்மையை இவ்வையகம் போற்றச் செய்ய காரணமாக இருந்த பாரதத்தில் அவதரித்த “ஆன்மீகத்திலகம்”சுவாமி விவேகானந்தர். அமெரிக்க சிக்காகோ நகரில்1893 இல் நடைபெற்ற “சர்வமத மகாசபை”யில் அன்னார் ஆற்றிய இந்து சமய சொற்பொழிவு இவ்வுலகின் அனைத்து தேச மாந்தர்களினதும் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. 1863 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் விஸ்வநாத தத்தர் ,புவனேஸ்வரி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இயற்பெயர் நரேந்திரநாத் தத்தர்,ஆன்மீகத்தில் ஊறித்தளைத்த குடும்பத்தில் பிறந்த நரேந்திரநாத் சிறுவயதிலே இந்து தத்துவம், இறைவன் பற்றிய சிந்தனையில் மூழ்கினார். இளம் வயதிலேயே ஞானியைப்போன்ற ஓர் தோற்றப்பார்வையை கொண்டிருந்தார் நரேந்திரநாத். இந்து சமய நூல்கள், இந்து தத்துவ உரைகள்,மற்றும் மேலைத்தேய வரலாற்று நூல்கள் போன்றவற்றை கற்றுத்தேர்ந்தார்.தன்னம்பிக்கை, தைரியம், மனோதிடம் இவைகளின் மொத்த உரு நரேந்திரநாத். எந்தவொரு விடயங்களையும் சுலபமாக புரிந்து கொள்ளும் ஆற்றலை தன்னகத்தே கொண்டவர் நரேந்திரநாத். சிலம்பம்,வாள் வீச்சு,மல்யுத்தம் போன்ற வீரவிளையாட்டுகளையும் கற்றுத்தேர்ந்தார், அந்நேரத்தில் இந்து மதத் தத்துவங்களை விமர்சித்தும்,மேலை நாட்டு பக்தி முறைகளை பாராட்டியும்,”பிரம்ம சமாஜ “அமைப்பினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர்.இதில் தன் கவனத்தை செலுத்திய நரேந்திரநாத், அவர்களின் போதனைகளில் உண்மை இருப்பதாக எண்ணிய நரேந்திரநாத் இந்து மத இறை த்துவங்ஙளையும்,உருவ வழிபாடுகளையும் விமர்சிக்க தொடங்கினார்.
அதன் பின் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகளில் தன் கவனத்தை செலுத்திய நரேந்திரநாத் ,ராமகிருஷ்ணரிடம் இருந்த ஓர் தெய்வீக தன்மையயை உணர்ந்து அவருக்கு சீடராக “தட்சினேஷ்வரத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்து பணிவிடையாற்றினார்.1886 ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி ராமகிருஷ்ணர் மறைந்தார்.அதன் பின் அவரின் 15 சீடர்களுடன் தலைமைப் பொறுப்பை ஏற்று நரேந்திரநாத் வழி நடத்தினார். 15 சீடர்களுடன் தானும் துறவறம் மேற்கொண்டு காவியுடையை தரித்துக்கொண்டார். விபூதிசானந்தர், சச்சிதானந்தர் என தனது நாமத்தை மாற்றிக்கொண்டார் நரேந்திரநாத். 1888 ஆம் ஆண்டு கொல்கத்தாவை விட்டு வெளியேறி இமயம் முதல் குமரி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆன்மீகப்பணியை தொடர்ந்தார்.மைசூர், கேரளா வழியாக கன்னியாகுமரி வந்த நரேந்திரநாத் அங்கு கடலின் நடுவே அமைந்திருந்த ஓர் பாறையில் தொடர்ந்து மூன்று நாட்கள் தியானத்தில் ஆழ்ந்தார்.அப்போதுதான் இவ்வுலகிற்கு தான் ஆற்ற வேண்டிய ஆன் மீகப்பணியை உணர்ந்தார். இந்நினைவாக இவ்விடத்தில் “சுவாமி விவேகானந்தர் “தியான மண்டபம் அமைந்திருப்பதை இன்றும் காணலாம். இத்தியானத்தின் பின்னர், அமெரிக்க சிக்காகோ நகரில் நடைபெறும் சர்வமத மகாசபைியல் உரையாற்றும் ஆர்வம் நரேந்திரநாத்துக்கு ஏற்பட்டது. கடிதம் மூலம் அன்னை சாரதா தேவியின் உத்தரவையும் பெற்றுக் கொண்ட நரேந்திரநாத், 1893ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மும்பையில் இருந்து கப்பலில் ஏறிய நரேந்திரநாத், அதற்கு முதல் நாள் தனது பெயரை “விவேகானந்தர் “என மாற்றிக்கொண்டார், 1893 ஆம் ஆண்டு ஜூலை 31ம் திகதி அமெரிக்கா சென்றடைந்நார் சுவாமி விவேகானந்தர், செப்டம்பரில் நடைபெற்றது சர்வமத மகாசபையில் உரையாற்ற எழுந்த விவேகானந்தர், ஆரம்பத்திலேயே சகோதரிகளே, சகோதரர்களே,(sisters & brothers)என உரையை தொடர கரகோஷம் விண்ணைப்பிழந்தது .கரவொலி நிற்கவே சில வினாடிகள் ஆனது. இந்து மதத்தின் மாண்பு ,இந்திய தேசத்தின் மகத்துவம், மற்றும் அரிய பல தத்துவங்களை ஆங்கிலத்திலேயே ஆங்கிலேயர்களுக்கு புரியும் வண்ணம் இலக்கிய இலக்கண நடையில் விவேகானந்தர் அன்று ஆற்றிய உரை
இவ்வுலகின் அனைத்து தேச மாந்தர்களினதும் கவனத்திற்கும் சென்று, இந்து மதத்தின் மேன்மையையும், இந்திய தேசத்தின் சகோதரத்துவத்தையும், சுவாமி விவேகானந்தரின் தெய்வீகத்தன்மையையும் உலகறியச்செய்தது.பின் அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த சுவாமி நியூயோர்க் நகரில் தனக்கு பெருகிய சீடர்களின் உதவியுடன் நிலையான “வேதாந்த சங்கத்தை நிறுவி பல சீடர்களையும் உருவாக்கி நமது மதத்திற்கு பெருமை சேர்த்தார், பின் அங்கிருந்து பலரின் அழைப்பிற்கிணங்கி ,இங்கிலாந்திலும் கால் பதித்து இந்து தத்துவங்களை பறைசாற்றி அங்கும் “வேதாந்த சங்கத்தை நிறுவி இந்துக்கோட்பாடுகளுக்கு கீர்த்தி செய்தார் விவேகானந்தர். தொடர்ந்து 1896 டிசம்பர் 16ஆம் திகதி அங்கிருந்து தாயகம் நோக்கி புறப்பட்ட கப்பல் 1987ஆம் ஆண்டு ஜனவரி 15 இலங்கைத் தலைநகரான கொழும்பை வந்தடைந்தது. இலங்கையின் முக்கியமான நகரங்களில் விவேகானந்தருக்கு இனம், மதம், மொழிகளை கடந்து, சென்ற இடங்களில் எல்லாம் ராஜமரியாதை கிட்டியது ,அம்மகிழ்ச்சியுடன் பாம்பன் வழியாக ராமேஸ்வரம் சென்று, தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் சமய பிரச்சாரம் செய்து, ஒன்பது ஆண்டுகாலத்தின் பின் கொல்கத்தா சென்றடைந்தார் சுவாமிகள்.அங்கு கங்கைக் கரையில் “பேலூர்”என்ற இடத்தில் தமது ஆன்மீக குருவான சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரில் மடம், இயக்கம் என ஸ்தாபித்து அதை குரு காணிக்கையாக அளித்த அ சுவாமி விவேகானந்தர், இறுதியில் ஆஸ்த்துமா,நீரிழிவு நோய் காரணமாக 1902_06_04 அன்று தனது 39 ம் அகவையில் இப்பெருமகனார் வையகம் விட்டு வானகம் சென்று இறையுடன் கலந்தார்,எத்தனையோ மகான்கள் இப்புவிதனில் ஆற்றிய ஆன்மீக பணிகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் அமைந்தது சுவாமி விவேகானந்தரின் வரலாறு ,அண்ணல் புதைக்கப்பட்டாலும் அவரால் விதைக்கப்பட்ட போதனைகள் என்ற விதைகள் இன்றும் ஆழம் போல் வேரூன்றி அருகு போல் தளைத்திருப்பது ஒவ்வொரு இந்துக்களும் செய்த பெரும் பாக்கியமாகவே கருதவேண்டும்.
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்
செய்தியாளர் விக்னேஸ்வரன்