இந்திய குடியரசு தினவிழாவில் பங்களாதேஷ் ராணுவம் பங்கேற்பு?

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், பங்களாதேஷ் ஆயுதப்படைகளின் 122 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவு பங்கேற்கிறது என்று பாதுகாப்பு வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது 1971 பங்களாதேஷின் விடுதலைப் போரின் 50’வது ஆண்டு விழா என்பதால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையில் கூட்டாக நிறைய நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த குழு ஜனவரி 12’ஆம் தேதி டெல்லிக்கு வந்து ஜனவரி 30’ஆம் தேதி புறப்படும். வந்தவுடன், ஜனவரி 19’ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்படும்” என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் ஒரு இராணுவ இசைக்குழு ஆகியவை இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விமானப்படை விமானங்கள் பங்களாதேஷுக்கு சென்று அந்நாட்டு வீரர்களை அழைத்து வரும். பங்களாதேஷ் வீரர்கள் தங்கள் போர் உடையில் இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.

அவர்கள் இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் ஜனவரி 28 மற்றும் 29 தேதிகளில் ஆக்ரா மற்றும் அஜ்மீரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு வருகை தருவார்கள்.

விடுதலைப் போரில் பங்கேற்ற இராணுவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களை வருகை தரும் குழுவில் சேர்க்குமாறு வெளியுறவு அமைச்சகம்பங்களாதேஷுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவும் பங்களாதேஷும் 50’வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான நிகழ்வுகளைத் திட்டமிட்டுள்ளன.

2018’ஆம் ஆண்டில், பிரெஞ்சு இராணுவம் இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முதல் வெளிநாட்டுப் படையாக ஆனது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுநோய் நிலைமை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த ஆண்டு அணிவகுப்பு செங்கோட்டைக்கு முழு தூரம் செல்வதற்கு பதிலாக தேசிய போர் நினைவுச்சின்னத்தின் முன்னால் உள்ள தேசிய அரங்கத்தில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. அணிவகுப்புப் படையினரின் அளவும் 114’லிருந்து 96’ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, வழக்கமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுடன் ஒப்பிடும்போது 25,000 பார்வையாளர்கள் மட்டுமே அணிவகுப்பைக் காண அனுமதிக்கப்படுவார்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.