கையெழுத்து ஒப்பந்தம்!
சவுதி இளவரசர்
கத்தார் அமீர் இடையே கையெழுத்து ஒப்பந்தம்!
அல் உலா. சவுதி அரேபியா
சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் மற்றும் கத்தார் அமீர் ஆகியோர் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
கடந்த 2017 ஆம் வருடம் ஜூன் மாதம் முதல் கத்தார் நாட்டுக்கு சவுதி அரேபியா, அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நான்கு நாடுகள் பயணத்தடை விதித்தது. அந்நாட்டுப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்த தடை வெகு நாட்களாகத் தொடர்ந்து வந்தது. அதையொட்டி சவுதி அரேபியா மற்றும் கத்தார் நாட்டுக்கு இடையே சமாதான பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தது. இதில் தற்போது உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
இன்று இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அவதானி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் மூலம் சவுதி அரேபியா தனது வான்வெளி, நிலம் மற்றும் கடல் எல்லைகளை கத்தாருக்குத் திறக்க உள்ளது. இதன் மூலம் கத்தாரைப் புறக்கணிக்கும் மற்ற நாடுகளும் தன் முடிவை மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
இன்று கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இரு நாடுகளுக்கு இடையே பயணம் மற்றும் வர்த்தகம் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது. இதற்கு வளைகுடா நாடுகள் கூட்டமைப்பு செயலாளர் நயீப் அல் ஹஜ்ரப் வரவேற்பைத் தெரிவித்துள்ளார். அமீரக வெளியுறவு அமைச்சர் அன்வர் முகமது இதன் மூலம் வளைகுடா நாடுகள் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு மேம்படும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.