5G தொழில்நுட்பம் என்றால் என்ன?


ஐந்தாம் தலைமுறைக்கான அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5Gஎனப்படும். இது முந்தைய 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த புதிய தலைமுறை கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம் தகவல்களை மின்னல் வேகத்தில் அனுப்ப முடியும். அதாவது 4ஜி தொழில்நுட்பத்தைவிட இது ஆயிரம் மடங்கு அதிக வேகம் கொண்டது. இதனால் வலைப்பின்னல் நெரிசல்கள் இனி பழங்கதைகளாகிவிடும்.
இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்ட பின், தகவல்களை உடனடியாக தரவிறக்கம் செய்ய முடியும். ஒரு முழு நீள திரைப்படத்தை சில நிமிடங்களிலும், அலைபேசி செயலிகளை சில வினாடிகளிலும் தரவிறக்கம் செய்யவும் முடியும்
4G-க்கு மாறி இன்னும் சில வருடங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் எதற்காக நாம் 5G-க்கு செல்லவேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். காலத்தின் தேவை என்பதுதான் அதற்கான பதில்
.3G வரைக்குமே செல்லுலார் நெட்வொர்க்குகள் அனைத்தும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு மட்டுமே பயன்பட்டது. அப்போது நம்மிடம் இருந்ததெல்லாம் ஸ்மார்ட்போன்கள் மட்டும்தான். எனவே பேசவோ, இணைய வசதியை பயன்படுத்தவோ மட்டும்தான் 3G-யை பயன்படுத்தினோம்.
ஆனால், 4G வந்த சமயத்தில் இன்னொரு தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்தது; அது இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் (Iot). கேட்ஜெட்ஸ், எலக்ட்ரானிக் பொருள்கள், இயந்திரங்கள் என அனைத்தையுமே இணையத்துடன் சேர்த்து பயன்படுத்துவதுதான் இந்த இன்டர்நெட் ஆப் திங்க்ஸ். ஸ்மார்ட் ஹோம்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
ஸ்மார்ட்போன்களைப் போல இவை குறைவான டேட்டாவைப் பயன்படுத்தப்போவதில்லை.அதிகளவிலான டேட்டாவை பயன்படுத்தும். ரோபோட்டிக் இயந்திரங்கள் அடங்கிய தொழிற்சாலை, ஓட்டுநர் இல்லாத கார், தானாகவே இயங்கும் வேளாண் கருவிகள் போன்றவையெல்லாம் இன்னும் சில காலத்திற்குள் நிஜமாகிவிடும்.
இவை அனைத்திற்குமே டேட்டாதான் ஆதார மூலம். இதுவரைக்கும் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே செலவழித்த டேட்டாவை இனிமேல் இவையும் பங்கிட்டுக்கொள்ளப்போகின்றன. அந்தக் கூடுதல் டேட்டாவை தற்போதைய சிஸ்டத்தை பயன்படுத்தி எப்படி அனுப்பமுடியும்?
மேலும், நாம் பயன்படுத்தும் 4G-யின் வேகம் தற்போதைய பயன்பாடுகளுக்கு ஏற்றதுதான் என்றாலும், அதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. தகவல்களை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் இடையே சில மைக்ரோ நொடிகள் தாமதம் ஏற்படுவது அதில் ஒரு பிரச்னை. வாட்ஸ்அப்பில் சில நொடிகள் மெசேஜ் தாமதமாக செல்வதால், நமக்கொன்றும் ஆகப்போவதில்லை.
ஆனால் ரோபோக்களும், அதன் கன்ட்ரோல் சிஸ்டமும் ரியல் டைமில் இயங்கும் ஓர் இடத்தில் இந்த தாமதம் ஆபத்து அல்லவா? தொலைதூரத்தில் இருந்துகொண்டு இணையம் மூலம் ரோபோக்களை வைத்து ஒரு மருத்துவர் நோயாளியை பரிசோதிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அங்கே மருத்துவரின் ஒவ்வொரு கட்டளையும் உடனே ரோபோக்களுக்கு செல்ல வேண்டியது மிகமுக்கியம்.
ஆனால், மருத்துவர் கட்டளையிட்டு சில நொடிகளுக்குப் பின்னர்தான் ரோபோ இயங்குகிறது என்றால் மருத்துவரால் மேற்கொண்டு நோயாளியைப் பரிசோதிக்க முடியாது. எனவே எதிர்காலத்தில் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணவும், புதிதாக இணையப் போகிற பலமில்லியன் வாடிக்கையாளர்களை சமாளிக்கவும் நமக்கு 5G அதிஅவசியம்.
சுரேஷ்
திருச்சி
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.