ஓட்டல், திருமண விழாக்களில் மீதமாகும் உணவுகளை வழங்கும் திட்டம் தொடக்கம்!
இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் ‘சரியாக சாப்பிடு இந்தியா’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ‘சரியாக சாப்பிடு சென்னை’ என்ற திட்டம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ஓட்டல்கள், திருமண நிகழ்ச்சிகள், விழாக்களில் மீதமாகும் உணவை வீணாக்காமல், பசியோடு இருப்போருக்கு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா சைதாப்பேட்டையை அடுத்த சின்னமலையில் நேற்று நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி இதில் பங்கேற்று திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘இத்திட்டத்தில் இரு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம், சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களிலும், மீதமாகும் உணவுப் பொருட்களை சேகரித்து, தேவைப்படுவோருக்கு கொண்டு சேர்க்கப்படும். முதற்கட்டமாக ஓட்டல் சரவண பவன் உள்ளிட்ட 30 முன்னணி உணவு நிறுவனங்கள் இதில் பதிவு செய்துள்ளன’ என்றனர்.
இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அதிகாரி ஏ.சதாசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
S. செந்தில்நாதன்
இணை ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.