ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் பனி மூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப நாட்களாக குளிர்காலம் தொடங்கியுள்ளதால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. இதில் பகல் நேரத்தில் கடந்த மாதத்தை விட வெப்பநிலை வெகுவாக குறைந்து வருகிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவும் குறைந்துள்ளது.

இதனை அடுத்து நேற்று காலை நேரத்தில் அபுதாபி மற்றும் துபாய் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக துபாயின் வானுயர்ந்த பல கட்டிடங்கள் பனிமூட்டத்தில் மறைந்தது போல் காணப்பட்டது. இந்த பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடித்தது.

சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் தென்பட்டது. இதனால் வாகனங்கள் சாலைகளில் வேகமாக செல்ல முடியாமல் திணறின.

பல்வேறு சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்கள் சென்ற காட்சியை காணமுடிந்தது. அந்த பகுதிகளில் பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

பனிமூட்டம் காரணமாக சாலையில் முன்புறமாக 1 கி.மீ. தொலைவுக்கு பார்வைதிறன் குறையும் என அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக துபாய்-அபுதாபி செல்லும் வாகனங்கள் மிக கவனமாக செல்ல வேண்டும். முன்னால் செல்லும் வாகனங்களை கவனித்து தகுந்த இடைவெளியுடன் தங்கள் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும்.

இன்றும், நாளையும் இதேபோன்ற வானிலை அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும். அதுமட்டுமல்லாமல் இன்று (சனிக்கிழமை) துபாயில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் சாலைகளை பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.