தமிழக அரசுக்கு அடுத்த சிக்கல்! போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!!!

தங்களது கோரிக்கைகளுக்கு வரும் 17 -ம் தேதிக்குள் முறையான தீர்வு காணப்படாவிடவில்லை எனில், வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என தமிழக அரசுக்கு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 14-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனே கணக்கில் வரவு வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3 -ம் தேதி அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்குவது என்றும், தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக டிசம்பர் 11 மற்றும் 12 -ம் தேதிகளில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்க தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது என்றும், டிசம்பர் 14 மற்றும்15 தேதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கள் கோரிக்கைகளின் மீது வரும் 17 -ம் தேதிக்குள் தமிழக அரசும், போக்குவரத்துறையும் தீர்வு காணவில்லை எனில் 17 -ம் தேதி அல்லது அடுத்த ஆறு வாரங்களில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. இதில், இந்த போக்குவரத்து விவகாரம் தமிழகம் முழுக்க எதிரொலிக்கும். காரணம், பெரும்பாலான ஏழை எளிய மக்கள் அரசு போக்குவரத்து கழகத்தை நம்பியே உள்ளனர் என்பதால்தான்.

A. அப்துல் சமது
தலைமை ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.