ஆஸ்திரேலியாவில் அசத்திய தமிழக வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார்!

சென்னை, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய தமிழகத்தின் டி.நடராஜன், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதன் மூலம் நடராஜனுக்கு தமிழகத்தில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் நடராஜனை பாராட்டி ட்விட் செய்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, “இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.